பெரியார் பல்கலை.யில் பிப். 22, 23-இல் சுரங்கப் பொறியாளர்கள் மாநாடு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தேசிய அளவில் சுரங்கப் பொறியாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக பதிவாளர் மா.மணிவண்ணன் தெரிவித்தார்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தேசிய அளவில் சுரங்கப் பொறியாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளதாக பதிவாளர் மா.மணிவண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை பெரியார் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொறியாளர்கள் கழகம், சுரங்கம் சார் தீர்வமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, பெரியார் பல்கலைக்கழக புவியமைப்பியல் துறை இணைந்து 29-ஆவது தேசிய அளவிலான சுரங்கப் பொறியாளர்கள் மாநாட்டினை வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடத்துகிறது.
சிறிய அளவிலான திறந்த வெளி சுரங்க தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற இம் மாநாட்டில், சுரங்க ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கல்வி நிறுவனங்கள், சுரங்கப் பொறியாளர்கள், புவியியலாளர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர்.
சிறிய அளவிளான திறந்த வெளி சுரங்கத்தில் செங்கல் சூளைக்கு தேவையான செம்மண்,  பீங்கான் தொழிற்சாலைக்கு தேவையான களிமண்,  கட்டுமானப் பணிக்கு தேவையான மணல், கிராவல், பில்டிங் ஸ்டோன், கருங்கல் மற்றும் இதர தொழிற்சாலைகளுக்கு தேவையான ஜிப்சம், கால்சைட், டோலமைட், குவார்ட்ஸ்சைட், சுண்ணாம்புக்கல் மற்றும் மேக்னசைட் முதலியன வெட்டி எடுக்கப்படுகின்றன.
இவ் வகை திறந்த வெளி சுரங்கங்கள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவ் வகை சுரங்க முதலீட்டாளர்கள் பொருளாதார தொழில்நுட்ப சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். 
சுரங்க முதலீட்டாளர்கள் இவ் கை நடவடிக்கைகளிலிருந்து மீண்டு, நீடித்த சுரங்கத் தொழிலில் ஈடுபட கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இச்சுரங்கப் பொறியாளர்கள் மாநாட்டில்  சுரங்க முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தகுந்த தொழில்நுட்பங்களை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நாட்டில் மத்திய அரசு நிறுவனமான  நெய்வேலி-லிக்னைட் கார்ப்பரேஷன் , மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு மேக்னசைட் கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா  நிறுவனத்தின் உயர் வெப்பம் தாங்கி தயாரிக்கும் தொழிற்சாலை, தனியார் நிறுவனமான ராஜபாளையம் சிமென்ட்ஸ் அண்டு கெமிக்கல் லிமிடெட் தொழிற்சாலைகளை சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சார்ந்த சுரங்க முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு சிறிய அளவிளான திறந்த வெளி சுரங்க நடவடிக்கை, வழிமுறைகள் மற்றும் இடர்ப்பாடுகள் குறித்து வல்லுநர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம்.
மேலும், இம் மாநாட்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இந்திய புவியியல் துறை, இந்திய சுரங்க பள்ளி, மாநில மற்றும் மத்திய சுரங்கத் துறை மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களிடம் கலந்துரையாடலாம். இம் மாநாட்டில் பங்கேற்று சிறப்பாக விவாதிக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இச் சுரங்கப் பொறியாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிநவீன கருவிகள் காட்சிப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுரங்கப் பொறியியலாளர்கள் மாநாடு மற்றும் முன்பதிவு தொடர்பான விவரங்களுக்கு 0427-2346268, 94434 15209, 70944 52626 ஆகிய எண்களுக்கு அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
அப்போது,  பெரியார் பல்கலைக்கழக புவியமைப்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் வெங்கடேஸ்வரன்,  இந்தியப் பொறியாளர் சங்க கௌரவ செயலர் எஸ்.ஆர்.சரவணன்,ஆட்சிக்குழு உறுப்பினர் சுரேஷ்,  புவி அமைப்பியல் நிபுணர்கள்  பி.தங்கராஜ்,  ந.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com