விமரிசையாக நடந்த மயானக் கொள்ளை

சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் அம்மன் வேடமணிந்தவர்கள் ஆடு, கோழிகளைக் கடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். 

சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் அம்மன் வேடமணிந்தவர்கள் ஆடு, கோழிகளைக் கடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
 மாசி திருவிழாவான மயானக் கொள்ளை விழாவுக்காக பக்தர்கள் 15 தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து, மகா சிவராத்திரி தினத்தில் அங்காளம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வந்தனர்.
 இதைத் தொடர்ந்து, மயானக் கொள்ளை நிகழ்ச்சி மிக விமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது. நெத்திமேடு, பொன்னம்மாபேட்டை, கருங்கல்பட்டி, பச்சபட்டி, கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் போன்ற காவல் தெய்வங்கள் போல வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர். சேலம் டவுன் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து வணங்கினர். மாசி அமாவாசையையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றது. அம்மனை வழிபட்ட பிறகு ஊர்வலமாக அம்மன் மற்றும் முனியப்பன் வேடமணிந்தவர்கள் ஊர்வலமாக அணைமேடு வழியாக ஜான்சன்பேட்டை காக்காயன் மயானத்துக்குச் சென்றனர்.
 ஊர்வலத்தில் அம்மன் வேடம் தரித்தவர்களிடம் வேண்டுதலின்படி ஆடு, கோழிகளை பக்தர்கள் கொடுத்தனர். இதையடுத்து அம்மன் வேடம் தரித்தவர்கள் ஆடு, கோழிகளை கடித்தனர்.
 ஊர்வலத்தில் அம்மன் வேடமணிந்தவர்களை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். சிலர் குழந்தை வரம் வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், திருமணம் நடைபெற வேண்டியும் சாலையில் படுத்து கொண்டனர். அவர்களை அம்மன் வேடம் தரித்தவர்கள் தாண்டி சென்றனர். காக்காயன் மயானத்துக்குச் சென்றவர்கள் அங்கு தங்களது விரதத்தை முடித்துக் கொண்டனர். மயானக் கொள்ளை நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com