கரியகோயில் நீர்த்தேக்கத்திலிருந்து  நீர் திறப்பு: விவசாயிகள் எதிர்ப்பு

கரியகோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர், மற்றும் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கரியகோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர், மற்றும் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயக்கட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கரியகோயில் நீர்த்தேக்கம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழை பெய்ததால் கரியகோயில் அணைக்கு போதுமான நீர் கிடைத்தது. இதனையடுத்து குடிநீருக்காக  வசிஷ்ட நதியில் 100 கனஅடி வீதம் 12.1.2018 முதல் 20.1.2018 வரை திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதே போல் பாசனத்துக்காக 21.1.2018 முதல் 2.2.2018 வரை 40 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது. 
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆத்தூர் கோட்டாட்சியர் ம.செல்வன் நீர்த்தேக்கத்தில் இருந்து வசிஷ்ட நதியில் தண்ணீர் திறந்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதியஆயக்கட்டு விவசாயிகள் பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, சேலம்  - கருமந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நீர்த்தேக்கத்தில் நீர் குறைந்து தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளை, அதிகாரிகள் சமாதானப்படுத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும்,  மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்கப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com