வாழைத்தார் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி  வாழப்பாடி தினசரி சந்தையில் வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி  வாழப்பாடி தினசரி சந்தையில் வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாழப்பாடி பகுதியில் சாகுபடியாகும் வாழைத்தார்களை,  வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள  தினசரி காய்கறிச் சந்தைக்கு கொண்டு வந்து,  ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சேலம்,  நாமக்கல்  மாவட்டங்களின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாழைத்தார்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். 
வாழப்பாடி பகுதியில் பருவ மழை பொய்த்து போனதால், பாசனத்துக்கு வழியின்றி,  வாழை சாகுபடியை விவசாயிகள் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், மூன்றாண்டுக்கு பின்  கடந்தாண்டு பெய்த பரவலான மழையால் வாழை சாகுபடி கணிசமாக உயர்ந்துள்ளது.
 பொங்கல் பண்டிகையையொட்டி  தேவை அதிகரித்து கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், வாழைத்தோட்டத்தில் பழமாகும் பதத்தில் முதிர்ந்த, மொந்தன்,  ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, கதலி, செவ்வாழை, பச்சைநாடன், மோரீஸ் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைத்தார்களை அறுவடை செய்த விவசாயிகள், கடந்த இரு தினங்களாக வாழப்பாடி தினசரி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
 விவசாயிகள் எதிர்பார்த்ததை போலவே, பொங்கல் பண்டிகை வழிபாட்டுக்கு  தேவை அதிகரித்ததால், வாழைத்தார் கொள்முதல் செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால், வாழைத்தார் விலை கணிசமாக உயர்ந்தது. கடந்த மாத இறுதி வரை  அதிகபட்சமாக ரூ. 300 வரை விலை போன  பூவன் ரக வாழைத்தார், வெள்ளிக்கிழமை ரூ. 600 வரை  விலை போனது.  நீண்ட நாள்களுக்கு பிறகு மகசூல் அதிகரித்துள்ள தருணத்தில், அனைத்து ரக வாழைத்தார்களுக்கும் ரூ.200 வரை  கூடுதல் விலையும் கிடைத்ததால் வாழப்பாடி பகுதி வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியது:
வாழப்பாடி பகுதியில்  மூன்றாண்டுக்கு பிறகு கடந்தாண்டு  பரவலமாக மழை பெய்ததால்,  வாழைச் சாகுபடி செய்வதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வழிபாட்டிற்கு தேவை அதிகரிக்கும் என்பதால், இத்தருணத்தில் அறுவடை செய்த விற்பனைக்குக் கொண்டு வந்த  வாழைத்தார்களுக்கு  கூடுதல் விலை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழிலாளர்களின் கூலி உயர்வு,  சரக்கு வாகனங்களின் வாடகை அதிகரிப்பு, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை  அதிகரிப்பு போன் காரணங்களினால், ஆண்டு முழுவதும் கூடுதல் விலை கிடைத்தால்தான், தொடர்ந்து வாழை சாகுபடி செய்யமுடியும் என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com