இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சகோதரிகள் பலி

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சம்பவத்தில் சகோதரிகள் இருவர் உயிரிழந்தனர்.

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சம்பவத்தில் சகோதரிகள் இருவர் உயிரிழந்தனர்.
சேலம் அருகேயுள்ள சித்தனூரைச் சேர்ந்தவர் சேகர். சேலம் தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி. இத் தம்பதியின் மகள் காயத்ரி (22), நந்தினி (16). இதில் காயத்திரி பிஎஸ்.சி. படித்துள்ளார். நந்தினி, சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை காயத்ரி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று நந்தினியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஜங்ஷன் ரயில்வே கோட்ட அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் சென்ற போது, திடீரென பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காயத்ரி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நந்தினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து தொடர்பாக அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வத்தை (31) போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், விபத்து நடந்த இடம் வளைவான பகுதி ஆகும். இதுதவிர இந்தப் பகுதியில் தார்ச்சாலை இல்லாமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வாகனங்கள் பாலத்தில் சிரமப்பட்டு செல்கின்றன. இந்த சாலையை தார்ச் சாலையாக்கினால் விபத்துகள் குறையும். இந்த பாதை சேலம் இரும்பாலைக்குச் செல்லும் பாதை ஆகும். தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இது தவிர நிறைய மணல் லாரிகளும் செல்கின்றன.
இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களை நிறுத்தியும், வேகத்தடை அமைத்தும் விபத்தைத் தடுக்க சேலம் மாநகரக் காவல் ஆணையர் சங்கர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com