தம்மம்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் விலை உயர்ந்தது

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் விலை உயர்ந்துள்ளது.

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் விலை உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இதனால் தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், வாழக்கோம்பை, பனந்தோப்பு, கொண்டயம்பள்ளி, கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காளைகள் வளர்க்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின்போது விவசாயிகள் பலரும் தங்களது காளைகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். இதனால் தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைகளே இல்லாத சூழல் உருவானது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெய்துவரும் மழையால், விவசாயிகள் உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை பாரம்பரியபடி வளர்க்க தொடங்கி விட்டனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தம்மம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், காளையை ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கியுள்ளார். இந்த காளை அதிவேகமாக ஓடும் திறன்பெற்றது. இக்காளையை சென்னையில் டிச.6, 7 -ஆம் தேதி ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற காளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்று இருந்தார். தற்போது அந்த காளையின் விலை ரூ.2.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுபோல, தம்மம்பட்டி பகுதிகளில் மீண்டும் ஜல்லிக்கட்டு காளைகளை பலரும் வளர்க்க தொடங்கிவிட்டனர். இதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை வாங்குவதற்காக திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, கரூர்உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல துவங்கிவிட்டனர். ஒரு காளையின் விலை ரூ.
1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வரையிலான விலையில் வாங்கி வருகின்றனர். காளைகளின் விலையேற்றம் குறித்து விவசாயிகள் கூறியது: காளைகளின் ஓடும் திறன் , பிடிபடாத தன்மை, நின்று நிதானமாக காளையர்களை துவம்சம் செய்யும் குணம் போன்றவைகளைப் பொறுத்து காளைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுவிழா மீண்டும் நடைபெற துவங்கிய சூழலில் காளைகளின் விலை உயர்ந்தபடி உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com