வாழப்பாடி பகுதி கிராம சாலைகளில் காணப்படும் தமிழ் எண் குறித்த மைல்கற்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கிராமப்புற சாலைகளில் தமிழ் எண்களை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள
வாழப்பாடி பகுதி கிராம சாலைகளில் காணப்படும் தமிழ் எண் குறித்த மைல்கற்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கிராமப்புற சாலைகளில் தமிழ் எண்களை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பழமையான மைல்கற்கள், காலத்தால் அழியாமல் பயணிகளுக்கு இன்றளவும் இலக்கு துôரத்தை சுட்டிக்காட்டி கம்பீரமாக வழிகாட்டி வருகின்றன.
 தமிழ் எண் குறித்த பழமையான மைல்கற்களை பாதுகாக்கவும், புதிய மைல்கற்களிலும் தமிழ் எண்களை குறிப்பிடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 கிராமப்புற மக்களிடையேயும் ஆங்கில மொழி மோகம் அதிகரித்து விட்டதால், ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் ஏராளமானோர் பெருமையாகக் கருதுகின்றனர். அதனால், பாரம்பரியமிக்க செம்மொழியான தமிழ் மொழி மீதான தாக்கம் தமிழை தாய் மொழியாகக் கொண்டோரிடமும் குறைந்து வருகிறது.
 ஆங்கில வழிக் கல்வி முறையை மக்கள் விரும்புவதால், அரசுப் பள்ளிகளிலும்கூட ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதும் போதுகூட அரபு எண்களே பயன்படுத்தப்படுகின்றன. எத்துறையிலும் தமிழ் எண்கள் பயன்படுத்தப்படாததால், அந்த எண்களை அடையாளம் காண்பதில் தற்கால சந்ததியருக்கு சிரமம் ஏற்படுகிறது.
 ஆனால், வாழப்பாடி பகுதியில் கிராமப்புற சாலையோரங்களில், நூறாண்டுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட மைல்கற்களில் அரபு எண்களோடு தமிழ் எண்களையும் குறிப்பிட்டுள்ளனர். அந்த மைல்கற்கள் காலத்தால் அழியாமல் இன்றளவும் பல கிராமங்களில் காணப்படுகின்றன.
 அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி ஏரிக்காடு அடுப்புக்கல்காடு பகுதியில் நொச்சிப்பட்டி செல்லும் சாலையில், அந்த கிராமத்துக்கு செல்லும் இலக்கு தூரத்தை வழிபோக்கர்களுக்கு சுட்டிக்காட்டும் வகையில், 5 என அரபு எண்ணோடு, ? என்ற தமிழ் எண்ணையும் குறித்து வைக்கப்பட்டுள்ள மைல்கல் இன்றளவும் கம்பீரமாய் வழிகாட்டி வருகிறது.
 எனவே, தமிழ் எண் குறித்த பழமையான மைல்கற்களை பாதுகாத்து பழுதடையாமல் தொடர்ந்து பராமரிக்கவும், நெடுஞ்சாலைத் துறை வாயிலாக வைக்கப்படும் புதிய மைல்கற்களிலும் தமிழ் எண்களை குறிப்பிடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 அதுகுறித்து வாழப்பாடி இலக்கிய பேரவை செயலாளர் சிவ.எம்கோ கூறியது:
 அரபு எண்களையே பயன்படுத்தி வருவதால் தமிழ் மொழியில் தனித்துவமான எண் குறியீடுகள் இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரியாமல் போய்விட்டது. பாடத் திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் எண்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வழக்கத்தில் இல்லாததால் அவற்றை தற்கால சந்ததியர் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
 இந்நிலையில், வாழப்பாடி பகுதி கிராம சாலைகளில் தமிழ் எண் குறித்த பழமையான மைல்கற்கள் இன்றளவும் வழிபோக்கர்களுக்கு இலக்கு தூரத்தைச் சுட்டிக்காட்டி வருவதும், அதனை கிராம மக்கள் சிதைக்காமல் பாதுகாத்து வருவதும் பாராட்டுக்குரியதாகும்.
 தமிழ் எண் குறித்த பழமையான மைல்கற்களை பாதுகாக்கவும், நெடுஞ்சாலைத் துறை வைக்கும் புதிய மைல்கற்களிலும் தமிழ் எண்களை குறிப்பிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com