பசுமை சாலை திட்டத்துக்கு விளைநிலங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்: விவசாயிகள் கருத்து

பசுமை சாலை திட்டத்துக்கு எக்காரணத்தைக் கொண்டும் தங்களது விளைநிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், தொடர் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பசுமை சாலை திட்டத்துக்கு எக்காரணத்தைக் கொண்டும் தங்களது விளைநிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், தொடர் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
 சேலம் - சென்னை இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யும் பணி முடிந்த நிலையில், இந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 3 கட்டமாக நடைபெற்று வந்தது.
 கடந்த ஜூலை 7 மற்றும் 10 ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிலம் எடுப்பு அலகு 1, அலகு 3, அலகு 5 பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
 இதனிடையே, அலகு 2-க்கு உள்பட்ட வட்டத்தைச் சேர்ந்த பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், அக்ரஹாரம், பூலாவரி, நிலம் எடுப்பு அலகு 4-க்கு உள்பட்ட ஜருகுமலை, கெஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி மற்றும் நிலவாரப்பட்டியைச் சேர்ந்த எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
 மணியனூரில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார் விவசாயிகளிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டார்.
 நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, பூலாவரி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
 பெரும்பாலான விவசாயிகள் பசுமை சாலை திட்டம் தங்களுக்குத் தேவையில்லை என்றும், இந்தத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் தங்களது விளைநிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், தொடர்ந்து அதற்காகப் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 பூலாவரி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் ஆட்சேபனை மனு அளித்ததற்காக ஒப்புகை சீட்டு கேட்டனர். விவசாயிகள் கையொப்பத்துடன், அரசு முத்திரை சீல் வைக்க வேண்டும் என்று கேட்டதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பூலாவரி பகுதி விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
 இதுதொடர்பாக விவசாயிகள் கூறியது:
 இந்த சாலை அமையும் விதம், அதன் வரைபடம் குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. இந்த சாலை அமைந்தால் தங்களுக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்று எப்படி தெரிவிக்க முடியும்?
 மேலும், விளை நிலத்தை அரசுக்கு கொடுக்க தங்களுக்கு விருப்பம் இல்லாத நிலையில், தங்களின் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தினால் தங்களது மரணத்துக்கு அரசு தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com