பசுமை வழி சாலை திட்டத்துக்கு  நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் ஆட்சேபனை மனுக்கள் அளிப்பு

சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர்

சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சுமார் 45 ஆட்சேபனை மனுக்களை தனி வட்டாட்சியர்களிடம் அளித்தனர்.
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது.  இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே,  இந்தத் திட்டத்துக்கு தற்போது விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்தநிலையில்,  சேலம் மாவட்டத்தில் 5 தனி வட்டாட்சியர்கள் (நில எடுப்பு) மூலம் அந்தந்த கிராமங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.  விவசாயிகளிடம் மனுக்களும் பெறப்பட்டன.
இந்தநிலையில்,  நிலம் எடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 14 ஆம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி,  தங்கதுரை உள்ளிட்டோர் நேரடி கண்காணிப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  மேலும், மனு அளிக்க வந்த விவசாயிகள், பொதுமக்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஆச்சாங்குட்டப்பட்டி, நிலாவரப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து மனுக்கள் அளித்தனர். இதில், விவசாய நிலங்களை அழித்து கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். 
ஏற்கெனவே போடப்பட்ட சாலைக்கான இழப்பீடு தொகையே இதுவரை கிடைக்கப் பெறாத நிலையில்,  தற்போது பசுமை வழி சாலை என்ற பெயரில் பசுமையை அழித்துக் கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டத்தை முழுமையாக எதிர்க்கிறோம்.  இந்த திட்டத்துக்கு தங்களது நிலங்களைக் கொடுக்க முடியாது என்றும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.செல்வம் உள்ளிட்டோர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து மனு அளிக்க வந்திருந்தனர்.  மேலும், மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது மனுக்களை அளித்துவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது,  முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:  சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்த முழு தகவலும் இங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியவில்லை. மேலும், பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடும் விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களை போலீஸார் மிரட்டி வருகின்றனர். அவர்களின் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திரட்டி வருவதால், அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  எங்கள் கட்சியைப் பொருத்தவரையில் பசுமை வழி சாலை திட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்போம்.
மேலும், பசுமை சாலை திட்டம் செல்லும் சாலைகளில் உள்ள நிலங்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. ஆனால் தமிழக அரசோ 1 ஹெக்டேர் நிலத்துக்கு வெறும் ரூ.20 லட்சம் இழப்பீடாகத் தருவதாகத் தெரிவித்துள்ளது.  எனவே, சந்தை மதிப்பின் அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.  அதேநேரத்தில் ரூ.50 கோடி இழப்பீடாகக் கொடுத்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள நிலங்களை அளிக்க மாட்டோம் என்றார்.
இதனிடையே, வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன.  இதில் 5 தனி வட்டாட்சியர்கள் மூலம் சுமார் 45 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com