"தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்'

தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழ்நாடு கிளை தலைவர் கே.குமாரசாமி கூறினார்.

தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழ்நாடு கிளை தலைவர் கே.குமாரசாமி கூறினார்.
 சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் அமைப்பின் மோகன் பாகவத் தலைமையில் நாக்பூரில் மார்ச் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், 1,461 பேர் கலந்துகொண்டனர். அகில இந்திய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 தென் இந்திய தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த வன்னியராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரையை அடுத்த திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். வட தமிழக மாநிலச் செயலராக ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோட்டில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.
 ஆர்.எஸ்.எஸ்.-இல் இணைவோம் என்ற வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015-இல் 31,800 பேரும், 2016-இல் 47,000 ஆகவும், 2017-இல் 71,800ஆகவும் உயர்ந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
 அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடக்கக் கல்வியானது தாய் மொழி அல்லது இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கண்ணோட்டம் பெற்றோர்களுக்கும் வர வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
 என்ஜினீயரிங் போன்ற தொழில்நுட்பப் படிப்புகள், மருத்துவம் உள்பட எல்லா உயர் படிப்புகளுக்கான பாடத் திட்டம், தேர்வு எழுதுவதற்கான விருப்ப மொழித் தேர்வு ஆகியவற்றில் எல்லா மொழிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
 அனைத்து பிராந்திய மொழிகளிலும் நீட் தேர்வு எழுதலாம் என்ற மத்திய பாடத்திட்ட வாரியத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோன்று தேசிய அளவில் நடத்தப்படும் எல்லா போட்டித் தேர்வுகளிலும், எந்தெந்த தேர்வில் எல்லாம் பிராந்திய மொழிகளுக்கு வாய்ப்பு இல்லையோ, அந்த தேர்வுகளில் அவரவர் தாய்மொழி அல்லது விரும்பிய பிற மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
 பாரம்பரியமாகவே தேசிய ஒற்றுமைக்கு மொழிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எனவே, ஒருவர் அவரது தாய்மொழி மீது பெருமிதம் கொண்டிருப்பதை போலவே, பிற மொழிகளுக்கும் சமமான மதிப்பு, அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com