வாழப்பாடி தினசரி சந்தையில் கூடை அளவு முறை மாற்றம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி தினசரி சந்தையில் காய்கறி ஏல விற்பனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கூடை அளவு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து,

சேலம் மாவட்டம், வாழப்பாடி தினசரி சந்தையில் காய்கறி ஏல விற்பனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கூடை அளவு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எடைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் நவீன முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் குறுகிய கால பணப்பயிரான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கன், பரங்கி, பூசணி, மிளகாய் அவரை, கொத்தவரை, சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட நாட்டு ரக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். சமீப காலமாக, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், காளிப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.
 வாழப்பாடி தினசரி சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும், வாழப்பாடி தினசரி சந்தையில் காய்கறிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். அதனால், மாவட்ட அளவில் காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனையில் வாழப்பாடி முக்கிய மையமாக விளங்குகிறது. வாழப்பாடி பகுதியில் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகில் தினந்தோறும் காலை நேரத்தில் கூடும் தனியார் தினசரி சந்தைகளுக்கு காய்கறிகளை கொண்டு சென்று, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். சிறிய ரக காய்கறிகளை கூடைகளிலும், பெரிய காய்கறிகளை எண்ணிக்கையிலும் அளவீடு செய்து வந்தனர்.
 தோராயமாக எடையையும், தரத்தையும் கணக்கிட்டு ஏலம் விடப்பட்டு வந்ததால், எடை குறைந்தால் வியாபாரிகளுக்கும், எடை அதிகமாக இருந்தால் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டு வந்தது.
 இந்நிலையில், கூடை அளவு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் ஏல முறையில் காய்கறிகளை விற்பனை செய்வதால், விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை தரம்பார்த்து எடைபோட்டு சாக்குப்பைகளில் அடைத்து, அதன் எடையையும் தரத்தையும் அந்த சாக்குப்பையின் மேல் குறிப்பிட்டு, எடைக்கேற்ப விலையை நிர்ணயித்து ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.
 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த கூடை அளவு மற்றும் எண்ணிக்கை விலை நிர்ணய முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, எடைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் நவீன முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், வாழப்பாடி பகுதி விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com