பிளஸ் 2 தேர்வில் சேலம் மாவட்டம் 91.52 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சேலம் மாவட்டத்தில் 36,882 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.52 சதவீதத் தேர்ச்சி ஆகும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சேலம் மாவட்டத்தில் 36,882 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.52 சதவீதத் தேர்ச்சி ஆகும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் சேலம் வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 19,441மாணவர்கள், 20,859 மாணவிகள் என மொத்தம் 40,300 பேர் தேர்வெழுதினர்.
இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியாயின. இதில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தேர்ச்சி முடிவுகளை வெளியிட, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி பெற்றுக் கொண்டார்.
இதில், சேலம் மாவட்டத்தில் தேர்வெழுதிய 40,300 பேரில் 36,882 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 17,255 பேர், மாணவிகள் 19,627 பேர் என மொத்தம் 36,882 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.52 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த 2017 -ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.89 சதவீதமாக இருந்தது. 2018 கல்வியாண்டில் தேர்ச்சி 1.37 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் சேலம் மாவட்டம், 18 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், மாநில அளவில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ள 5 மாவட்டங்களில் சேலம் மாவட்டம் 86.53 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதாவது பிளஸ் 2 பொதுத் தேர்வை 128 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 20,158 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 7,341 பேர், மாணவிகள் 10,102 பேர் என மொத்தம் 17,443 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.53 சதவீதம் தேர்ச்சி ஆகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி 89.49 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்டம் வாங்கிய 314 பேர்:
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 314 பேர் பல்வேறு பாடங்களில் 200 - க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சென்டம் பெற்றுள்ளனர். இதில் கணக்குப் பாடத்தில் 103, கணக்குப் பதிவியலில் 90, வணிகவியலில் 80, கணினி அறிவியலில் 22, வேதியியலில் 9, பொருளியலில் 8, இயற்பியல், வணிக கணிதப் பாடத்தில் தலா ஒருவர் என மொத்தம் 314 பேர் 200 -க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர்.
1,180-க்கு மேல் 10 பேர்:
சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவர், 9 மாணவிகள் உள்பட 10 பேர் 1,180-க்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். 1,151-1,180 வரை 162, 1126 - 1150 வரை 295, 1,101-1,125 வரை 465, 1001-1,100 வரை 2,948, 901- 1000 வரை 4,818, 801 -900 வரை 6,943, 701-800 வரை 8,252, 700-க்கு கீழ் 11,407 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தாய், தந்தை இல்லாதவர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோரை கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டு, பின்னர் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வியை பிற பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வெழுதிய 87 பேரில் 74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி: சேலம் மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளும், 2 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 7 சுயநிதிப் பள்ளிகளும், 58 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 72 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
சேலம் மாவட்டத்தில், அழகப்பம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 153 பேரும், தாரமங்கலம் மாதிரிப் பள்ளியில் தேர்வெழுதிய 48 பேரும், கொளத்தூர் மாதிரிப் பள்ளியில் தேர்வெழுதிய 26 பேரும், தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 48 பேரும், அபிநவம் ஏகலைவா மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 58 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேட்டூர் அணை புனித மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 334 பேரும், ஏற்காடு நாசரேத் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 82 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 58 தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
மாற்றுத் திறனாளிகளில் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் 25 பேரும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் 7 பேரும், உடல் ஊனமுற்றவர்கள் 41 பேரும், பிற குறைபாடு உள்ளவர்கள் 11 பேரும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி கூறியது:
பிளஸ் 2 தேர்வில் சேலம் மாவட்டம் 91.52 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும், தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் போதிய கவனம் செலுத்தி, வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பரிந்துரையின் பேரில், வருகைப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பாக பெற்றோர் - மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். இதன் மூலம் வருகைப் பதிவு அதிகரிக்கப்பட்டு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 10-ஆம் வகுப்புக்குப் பிறகு மதிப்பெண் அடிப்படையில் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய பாடப் பிரிவை எடுத்து படிக்க ஆலோசனைகள் வழங்கப்படும் போது மாணவ, மாணவிகள் நல்ல முறையில் படித்து மதிப்பெண் பெறுவர். மேலும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவர். இந்த இரண்டு நடைமுறைகளும் வரும் கல்வியாண்டில் கடைப்பிடிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com