ஓமலூர் வட்டார கிராமங்களில் மாம்பழ அறுவடை காலம் தொடக்கம்

ஓமலூர் வட்டார கிராமப் பகுதிகளில் மாம்பழ அறுவடை சீசன் தொடங்கியுள்ள நிலையில்,  விளைச்சல் குறைந்துள்ளதால் மாம்பழம் விலை உயர்ந்துள்ளது.

ஓமலூர் வட்டார கிராமப் பகுதிகளில் மாம்பழ அறுவடை சீசன் தொடங்கியுள்ள நிலையில்,  விளைச்சல் குறைந்துள்ளதால் மாம்பழம் விலை உயர்ந்துள்ளது.
ஓமலூர்,  காடையாம்பட்டி,  தாரமங்கலம் ஆகிய வட்டாரங்களில் மாங்கன்றுகள் அதிகமாக நடவு செய்யப்பட்டுள்ளது.  தற்போது மாஞ்செடிகள் மரமாகி காய்கள் காய்த்துள்ளன.  ஓமலூர் வட்டாரக் கிராமங்களில் கடந்தாண்டு ஏரிகள் நிரம்பியதால் மாம்பழம் அதிகமாக விளைந்து குறைந்த விலைக்கு விற்பனையானது. ஆனால்,  நிகழாண்டு போதுமான மழை இல்லாமல் கடுமையான வெயில் அடித்து வருகிறது.  மாமரங்கள் பூக்கள் பூக்கும் காலத்திலும், பூக்கள் பிஞ்சாகும் காலத்திலும் பலத்த காற்று வீசியது.  மழை இல்லாமல், அனல் காற்றும் வீசியது. இதனால்,  பூக்களும், பிஞ்சுகளும் உதிர்ந்து கொட்டின.  
இதனால் தற்போது மாம்பழம் விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளது.  இந்தநிலையில் காமலாபுரம், டேனிஷ்பேட்டை, பச்சனம்பட்டி,  முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி,  சிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாம்பழ அறுவடை துவங்கியுள்ளது. இங்கே அறுவடை செய்யப்படும் கனிந்த மாம்பழங்களை பொதுமக்கள் மாந்தோப்புகளுக்கே நேரில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.ஆனால், கடும் வறட்சியால் நிகழாண்டு மாம்பழங்கள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ள காரணத்தினால் அதன் விலை உயர்ந்துள்ளது. மல்கோவா, செந்தூரா, பெங்களூரா, இமாம்பசந்த்,  சேலம் குண்டு ஆகிய ரக மாம்பழங்கள் ஒன்று ரூ. 25 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், மாந்தோப்புகளில் அறுவடை செய்யப்படும் மாங்காய்கள் அனைத்தும் உடனடியாக விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. கடைகளில் மாங்காய்களை ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைப்பதால் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கிறது.இதனால், விலை அதிகமாக இருந்தாலும், பாதிப்பில்லாத தரமான மாங்காய்களை பொதுமக்கள் தோப்புகளுக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். தோப்புகளில் வாங்கும் பழங்களை இயற்கை முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவதால் சுவை அதிகமாகவும், உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்காமலும் இருக்கும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இங்கே அறுவடையாகும் மாம்பழங்களை வெளி மாநில வியாபாரிகள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com