சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயிலை கவிழ்க்க முயற்சி: 3 பேர் கைது

சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயிலைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயிலைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருத்தாசலம்  ரயில் நிலையத்தில் இருந்து கடந்த அக்.19ஆம் தேதி சேலத்துக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், கடலூர் மாவட்டம் முகாசாபாரூர் -  புக்கிரவாரி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தபோது பாதையில் ஏதோ பிரச்னை இருப்பதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
பின்னர் ரயிலை விட்டு இறங்கிப் பார்த்தார். அப்போது ரயில் பாதையில் கான்கிரீட் ஃபிஷ் பிளேட்டுகளையும் தண்டவாளத்தையும் இணைக்கும் கிளிப்புகள்  ஆங்காங்கே கழற்றி போடப்பட்டிருப்பது தெரியவந்தது.  இதனால் ரயில் ஓட்டுநரின் சாதுரியமான முடிவால் அசாம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. 
இந்தச் சம்பவம் குறித்து சேலம் ரயில்வே கோட்ட டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், ஆய்வாளர் இளவரசி ஆகியோர்  நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், சின்னசேலம் ரயில் நிலைய முதுநிலைப் பிரிவு பொறியாளர் தமிழ்வளவன் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார். 
விசாரணையைத் தொடர்ந்து,  ரயில்வே கேங் மேன்கள்  கடலூர் மாவட்டம், வேப்பூர் பூலாம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (36),  வேப்பூர் சேர்வராயன்பேட்டையைச் சேர்ந்த மணிவேல் (32),  முகாசாபாரூரைச் சேர்ந்த ரகுராமன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்து, சேலம் 3 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக சேலம் ரயில்வே போலீஸார் கூறுகையில்,   ஃபிஷ் பிளேட்டு கிளிப்புகள் கழற்றப்பட்டு கிடந்த பகுதிக்கு கேங்மேன்கள் மட்டுமே வந்து சென்றது தெரியவந்தது. மேலும், கிளிப்புகளை கழற்றிப் போட்டதும் தெரிந்தது.  ஆள்கள் பற்றாக்குறையால் கூடுதல் பணிச் சுமை காரணமாக கிளிப்புகளை கழற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com