விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள்அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகை

சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட வீராச்சிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் விவசாய நிலங்களில்

சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட வீராச்சிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட வீராச்சிபாளையம், வீராச்சிபாளையம் அக்ரஹாரம்,  சின்னாகவுண்டனூர்,  கருமாபுரத்தானூர், தேவண்ணகவுண்டனூர், மஞ்சக்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு  பணி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான களவு ஆய்வுப் பணி வீராச்சிபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் நடைபெற்று வருவதை வட்டாட்சியர் கே.அருள்குமார் மேற்பார்வையிட்டார். 
அப்போது, துணை வட்டாட்சியர்கள் ரமேஷ், சிவராஜ்,  வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர்கள், மின்கோபுரம் அமைக்கும் நிறுவன பணியாளர்கள்   உடனிருந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விவசாயிகள்,  மாவட்ட ஆட்சியரின் அனுமதியில்லாமல் விவசாய நிலங்களில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த் துறையினரை பணி செய்ய விடாமல் ஒருமணி நேரம் முற்றுகையிட்டனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும்  அனைத்து  விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வெப்படை சண்முகம், பார்த்திபன், அருள், கவின், ராமமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர்,  விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விவசாயிகளின் நிலை பற்றி எடுத்துக் கூறினர்.  
இதையடுத்து சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார்,  வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் நிறுவன பணியாளர்களை அப்பகுதியில் இருந்து விடுவித்தனர்.  பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com