கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருட்டு: 8 லாரிகளுக்கு அபராதம்

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய லாரிகளை பறிமுதல் செய்து, நகராட்சி ஆணையர் சனிக்கிழமை அபராதம் விதித்தார்.

கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய லாரிகளை பறிமுதல் செய்து, நகராட்சி ஆணையர் சனிக்கிழமை அபராதம் விதித்தார்.
கொடைக்கானலில் பல மாதங்களாக போதியளவு மழை பெய்யாததால், குடிநீர்த் தேக்கமும், மனோ ரஞ்சிதம் அணையும் வற்றியுள்ளன. இதனால், கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.
தற்போது, கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்கியுள்ள இவர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டி, அதன் உரிமையாளர்கள் லாரி மூலம் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஓடைகள் மற்றும் ஏரியில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதனால், பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் லாரிகளை அப்பகுதியினர் சிறைப்பிடிப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் ஏரியில் இரவு நேரங்களில் 25-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி ஆட்சியர் வினீத், லாரிகள் கண்டிப்பாக ஏரியில் தண்ணீர் எடுக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனாலும், தடையை மீறி சனிக்கிழமை 8 லாரிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற நகராட்சி அதிகாரிகள், அந்த லாரிகளை பிடித்து அபராதம் விதித்து, ஏரிச்சாலை அருகே உள்ள கலையரங்கம் பகுதியில் நிறுத்தி வைத்தனர். ஆனால், இந்த லாரிகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், தண்ணீர் எடுக்க வந்த மற்ற லாரிகளும் கலையரங்கம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் நிறுத்தக் கூடிய இடமான கலையரங்கம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய லாரிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், லாரிகளை கலையரங்கம் பகுதியில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com