மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணய விவரங்களை சேகரிக்க உத்தரவு

தினமணி செய்தி எதிரொலியாக மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணய விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்தி எதிரொலியாக மாணவர் சேர்க்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணய விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 கூடுதல் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் மீண்டும் பணி நிரவல் நடத்த வேண்டும் என ஆக. 7ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
  இதன் எதிரொலியாக 2017-18 கல்வியாண்டில் ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதற்கான விவரங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியிடம், காலிப் பணியிடம் உள்ளிட்ட விவரங்களை பள்ளி வாரியாக சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 அதன்படி பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்கள் வழங்கப்பட வேண்டும். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை 1.8. 2017அன்று பள்ளியில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேட்டினை ஒப்பிட்டு துல்லியமாக குறிப்பிட வேண்டும்.  
 அதேபோல் பள்ளியில் பணியாற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் (பாட வாரியாக) விவரங்களை தயார் செய்து அனுப்ப வேண்டும். அதில் அந்த ஆசிரியர் தற்போது பணியாற்றும் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இதே போல் இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட வேண்டும்.
இந்த விவரங்களை ஒப்படைக்கும் போது, அந்தந்த பள்ளியின் ஆசிரியர் வருகைப் பதிவேட்டின் ஆகஸ்ட் 2017-க்குரிய பக்கத்தின் ஒளி நகல் இணைக்கப்பட வேண்டும். இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் தயாரிப்பவர், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 10 நாள்களுக்குள் அதன் விவரங்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 அதே போல், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, தலைமையாசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதற்கான தடையை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com