"தொல்லியல் சாட்சியங்களே சமூக வரலாற்றை உறுதி செய்யும்'

தொல்லியல் மூலம் கிடைக்கும் சாட்சியங்களின் மூலமே ஒரு இனத்தின் சமூக வரலாற்றை உறுதி செய்ய முடியும் என எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொல்லியல் மூலம் கிடைக்கும் சாட்சியங்களின் மூலமே ஒரு இனத்தின் சமூக வரலாற்றை உறுதி செய்ய முடியும் என எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, 7ஆம் நாள் நிகழ்ச்சியாக விவசாயக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நீர் வளமும், நீர் மேலாண்மையும் என்ற தலைப்பில் பொறியாளர் சே.பிரிட்டோராஜ் விளக்கம் அளித்தார். பின்னர் நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சிக்கு, இலக்கிய களத்தின் கூடுதல் பொருளாளர் மு.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் கீழடி தமிழ்ப் பண்பாட்டுப் புதையல் என்ற தலைப்பில் எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன் பேசியது:
கற்றறிந்த பல தகவல்களின் அடிப்படையிலேயே, ஒரு சமூகம் மதிப்பிடப்படுகிறது. சமூக வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில், சமூகம் தொடர்பான வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனை போதித்தால் மட்டுமே, மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். 
 ஒவ்வொரு இனத்திற்கும் வரலாறு முக்கியம். தொல்லியல் மூலம் கிடைக்கும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சமூக வரலாற்றை உறுதி செய்து கொள்ள முடியும். கீழடியில் தொல்லியல் எச்சங்களாக கிடைத்துள்ள 5,300 பொருள்களின் மூலம் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாறும் புத்துயிர் பெறும் வாய்ப்புகள் உள்ளன. 
 பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நகர நாகரீகம் இருந்துள்ள பகுதியாக கீழடி கண்டறியப்பட்டுள்ளது. நம்முடைய கல்வி முறையின் குறைபாடுகளால், நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்ளாத நிலையில் உள்ளோம். கொடைக்கானல் கீழ் பழனி மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல் திட்டைகள் கிடைத்துள்ளன. ஆனால், அவற்றின் முக்கியத்துவம் தெரியாமல் அழித்து வருகிறோம். 
 இந்தியாவின் பல்வேறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 54 தொல்லியல் ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் தொல்லியல் சான்றுகளுக்காக மனை விற்பனை தொழிலை முடக்கிவிடுவார்கள் என்ற எண்ணத்தாலும், ஆய்வு செய்வதற்கான இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் கிடைத்த தொல்லியல் சின்னங்களும் அழிவின் விழிம்பில் உள்ளன. 
சமூக ஊடகங்களில் மூலம் கிடைக்கும் தகவல்கள் பல வதந்தியாகவே உள்ளன. அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது என்பது, புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சாத்தியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com