கொடைக்கானலில் ஓடைப் புறம்போக்குப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டடங்கள்: நடவடிக்கை  எடுக்கப்படுமா?

கொடைக்கானல் ஓடைப் புறம்போக்குப்பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நீர்நிலைகள் சுருங்கி வருகின்றன. 

கொடைக்கானல் ஓடைப் புறம்போக்குப்பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் நீர்நிலைகள் சுருங்கி வருகின்றன. 
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குடியிருப்புப் பகுதி, விவசாயப் பகுதி, நீரோடைப் பகுதி, வனப் பகுதி, நகர்ப் பகுதி என கடந்த 100-ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் வரையறைப்படுத்தினர். காலப்போக்கில் அவை மாறி கொடைக்கானலில் உள்ள பகுதிகள் அனைத்து குடியிருப்புகளாக மாறி வருகின்றன. மேலும்
கொடைக்கானலில் அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள், ஓடைப்புறம்போக்குப் பகுதிகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வர்த்தக நிலையங்களாக மாறி வருகின்றன. கொடைக்கானல் பகுதிகளான லாஸ்காட்சாலை, தைக்கால் பகுதி, அப்சர்வேட்டரி பகுதி, ஊராட்சி ஒன்றியப் பகுதி, வனப் பகுதியையொட்டியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஆக்கிரமிப்பு செய்து வருவதால் நீரோடைகள் சுருங்கி வருகின்றன. சில இடங்களில் நீர்வரத்துப் பகுதிகள் அடைக்கப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் மழைநீர் தேங்கி வீடுகள்,விவசாயத் தோட்டங்களில் புகுகின்றன. 
கொடைக்கானல் பசுமையையும், நீரோடையையும், வனத்தையும் பாதுகாப்பதற்கு அனைத்துத் துறை அதிகாரிகளும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும் கொடைக்கானலில் தற்போது  இருக்கின்ற இயற்கை அழகு காப்பாற்றப்படும். தொடர்ந்து இதே நிலை ஏற்பட்டால் வருங்காலங்களில் ஓடைகளையும், விவசாயப் பகுதிகளையும், வனப் பகுதிகளையும் பார்க்க முடியாது. எங்குப் பார்த்தாலும் காங்கிரீட் கட்டடங்களும்,  கழிவுப் பொருட்களும் ஆங்காங்கே குவிக்கப்பட்டு துர்நாற்றமும்,  பசுமையின்றி இயற்கை அழகை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
கொடைக்கானலில் ஓடைப் பகுதிகள், புறம்போக்கு நிலங்கள், வனப்பகுதியையொட்டியுள்ள நிலங்களை சமூக விரோதக் கும்பல்கள் கைப்பற்றி அதற்கு அரசு அதிகாரிகளின் துணையோடு போலி பட்டா, வரி, மின் இணைப்பு ஆகியவற்றை பெற்றும், போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனையும் செய்து வருகின்றனர். 
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த சமூக விரோதச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com