பழனி ரயில் நிலையத்தில் முதன்முறையாக வந்திறங்கிய உர மூட்டைகள்

தூத்துக்குடியிலிருந்து பழனி ரயில் நிலையத்துக்கு முதன்முறையாக உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை வந்திறங்கின. திண்டுக்கல் மற்றும் பழனி ரயில் நிலையங்களுக்கு வந்திறங்கிய 2,688 டன் உர மூட்டைகள்,

தூத்துக்குடியிலிருந்து பழனி ரயில் நிலையத்துக்கு முதன்முறையாக உர மூட்டைகள் வெள்ளிக்கிழமை வந்திறங்கின. திண்டுக்கல் மற்றும் பழனி ரயில் நிலையங்களுக்கு வந்திறங்கிய 2,688 டன் உர மூட்டைகள், லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,560 ஹெக்டேரில் நெல் பயிர், 6,200 ஹெக்டேரில் சிறுதானியங்கள், 4ஆயிரம் ஹெக்டேரில் பயறு வகைகள், 250 ஹெக்டேரில் பருத்தி, 1,250 ஹெக்டேரில் கரும்பு என சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பழனி பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு வரை நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் மற்றும் தானியங்கள் விவசாயம் செய்யப்படுகின்றன.
இந் நிலையில், விவசாயிகளின் தேவைக்கு அனைத்து வகையான தரமான உரங்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரையிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு கூட்ஸ் வேகன்கள் மூலம் வந்திறங்கும் உர மூட்டைகள், லாரிகள் மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. தற்போது, முதன்முறையாக பழனி ரயில் நிலையத்திலும் உர மூட்டைகளை இறக்குவதற்கு, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) மனோகரன் மற்றும் உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) சுருளியப்பன் ஆகியோரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 512 டன் யூரியா, 576 டன் டிஏபி, 256 டன் காம்பளக்ஸ் என தலா 1,344 டன் உரங்கள், பழனி மற்றும் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திறங்கின. பின்னர், உர மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
முந்தைய காலங்களில் திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து உரங்கள் கொண்டு வரவேண்டி இருந்ததால், உரம் வருகைக்கு காலதாமதம், விலையேற்றம் இருந்தது. தற்போது பழனியிலேயே இறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் தேவைக்கு உடனடியாக உரம் கிடைப்பதுடன், விலையிலும் சிறிது குறைந்து மாற்றம் இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலான தொகைக்கு உரம் விற்பனை செய்யும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை, சம்பந்தப்பட் வட்டார வேளாண்மை அலுவலகத்திலோ, திண்டுக்கல் உதவி இயக்குநர் (தரக் கட்டுப்பாடு) அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம் என உதவி இயக்குநர் சுருளியப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com