நிலக்கோட்டை அருகே கார் கடத்தல்: 4 இளைஞர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஓட்டுநரை மிரட்டி காரை கடத்திச் சென்ற வழக்கில், மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஓட்டுநரை மிரட்டி காரை கடத்திச் சென்ற வழக்கில், மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் தினேஷ் (30). வாடகை ஆம்னி வேன் ஓட்டுநர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உறவினர் இறப்புக்கு செல்ல வேண்டும் என 5 இளைஞர்கள் ஜான் தினேஷை அழைத்துள்ளனர். அதன்பேரில் அவர்களுடன், மதுரை நோக்கி காரை ஜான் தினேஷ் ஓட்டிச் சென்றார். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்துள்ள சங்கால்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே சென்றபோது, அவர்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி காரை நிறுத்தும் படி அவரிடம் கூறினர்.
அப்போது காரிலிருந்து இறங்கிய ஒருவர், ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் காரிலிருந்து இறங்கிக் கொண்டாராம். பின்னர் அவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ.500-ஐ பறித்துக் கொண்ட அந்த கும்பல், அங்கிருந்து காருடன் தப்பிச் சென்று விட்டது. அதன் பின்னர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஜான் தினேஷ் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி கார்த்திகேயன், காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், சுகுமாறன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே ஜான் தினேஷிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட செல்லிடப்பேசி மூலம், காரை கடத்திச் சென்றவர்களில் ஒருவரான தினேஷின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து மதுரை மாவட்டம் , குருவித்துறையில் கடத்தப்பட்ட கார் பிடிபட்டது. இதனைத் தொடர்ந்து காரை கடத்திச் சென்ற சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள பெரியசோரகை கிராமத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி (30), தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள சித்தாதரி பகுதியைச் சேர்ந்த வெ.வெங்கடேசன் (31), மதுரை மாவட்டம், வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்த பெ.தினேஷ் (28), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள சொக்கு பள்ளப்பட்டியைச் சேர்ந்த வே.விக்னேஷ் (19) ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில் பழனிச்சாமி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த கடத்தலில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரான சொக்கு பள்ளப்பட்டியைச் சேர்ந்த பொட்டுராஜ் என்பவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com