2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ரூ.1.60 கோடி நிதி: நிலமில்லாமல் தவிக்கும் அரசுப் பள்ளி நிர்வாகம்

திண்டுக்கல் அருகே அரசுப் பள்ளி மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.60 கோடி நிதி, நிலம் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது.
2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ரூ.1.60 கோடி நிதி: நிலமில்லாமல் தவிக்கும் அரசுப் பள்ளி நிர்வாகம்

திண்டுக்கல் அருகே அரசுப் பள்ளி மேம்பாட்டுப் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1.60 கோடி நிதி, நிலம் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது.
திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த நடுநிலைப் பள்ளி, கடந்த 2011-12 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டது. இதேபோல், அதே ஆண்டில் மாவட்டம் முழுவதும் 18 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டன.
இதையடுத்து, இப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்தின் மூலமாக தலா ரூ.1.60 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது 1 ஏக்கரில் செயல்பட்டு வரும் மீனாட்சிநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளியில், கூடுதல் கட்டட வசதிகள் ஏற்படுத்த போதுமான இடவசதியில்லை. இதனால், கட்டடம், குடிநீர், கழிப்பறை, கணினி, நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதே நேரம், இப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.60 கோடி நிதி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடின்றி வங்கியில் கிடக்கிறது.
இந்நிலையில், பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1 ஏக்கர் நிலம் கேட்டு, மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சுற்றிலும் பல ஏக்கர் நிலம் வைத்துள்ள சில தனி நபர்களை பள்ளி நிர்வாகம் அணுகியது. ஆனால், நிலம் வழங்க யாரும் முன்வராததால், அரசு ஒதுக்கீடு செய்த நிதியும் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
இதனிடையே, மீனாட்சிநாயக்கன்பட்டிக்கு எதிர்புறம் உள்ள திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தில் 1 ஏக்கர் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கல்லூரிக்கான 40 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 25 ஏக்கரில் ஒரு மூலையில் 1 ஏக்கர் மட்டுமே பள்ளிக் கட்டடத்துக்காக கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் வழங்குவதற்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. நிலம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு உயர் கல்வித் துறை இயக்குநர் பரிந்துரை செய்தும், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
உள்ளூர் மாணவர்களின் நலன் கருதி நிலம் ஒதுக்க கல்லூரி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பள்ளி நிர்வாகம் மற்றும் மீனாட்சிநாயக்கன்பட்டி கிராம மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இது குறித்து கல்லூரி தரப்பில் கேட்டபோது, கல்லூரியின் விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் தேவைப்படுகிறது. பள்ளியின் தேவைக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்குவது பிரச்னையில்லை. அதனைத் தொடர்ந்து, பிற வளர்ச்சிப் பணிகளுக்கும் நிலம் கேட்க தொடங்குவார்கள் என்பதால் மறுத்து வருகிறோம் என ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தனியார் தாராள உதவி
நிலை உயர்த்தப்பட்ட 18 பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 17 பள்ளிகளில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், இந்த ஒரு பள்ளிக்கு மட்டும் நிலம் கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. பழனி அடுத்துள்ள பூலாம்பட்டி பள்ளிக்கு, தனியார் நிலம் 1.5 ஏக்கர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. நத்தம் அடுத்துள்ள கோமணாம்பட்டி பள்ளிக்கு பாதை அமைக்கவும் தனியார் மூலம் நிலம் தானமாகப் பெறப்பட்டுள்ளது. ஆனால், திண்டுக்கல்லில் அரசுக் கல்லூரி நிலம் வழங்க மறுப்பது கல்வித் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com