போலி மருத்துவர்களைக் கைது செய்ய திண்டுக்கல் ஆட்சியருக்கு அமைச்சர் உத்தரவு

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.

போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு மற்றும் காய்ச்சல் பாதிப்பு சிகிச்சைப் பிரிவுகளை பார்வையிட்டார். அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ் ஆகியோரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டை அணுக்கள் 60ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், அவர்களை மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். போலி மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெறுவதாலேயே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இனி போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வரை 670 போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ரூ.1,634 கோடி செலவில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ.11.68 கோடி செலவில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. ரூ.5 கோடி செலவில் எம்ஆர் ஸ்கேன் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் இம்மருத்துவமனையில் ரூ.20 கோடி செலவில் மகப்பேறு ஒப்புயிர் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் பானு, மருத்துவமனை கண்காணிப்பாள் சிவக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com