"குறைந்த செலவில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இளைஞர்கள் ஆய்வில் ஈடுபட வேண்டும்'

நமது வருமானத்தில் 17 சதவீதம் குடிநீருக்காக செலவிட வேண்டிய நிலை இருப்பதால், குறைந்த செலவில் பாதுகாப்பான குடிநீர்

நமது வருமானத்தில் 17 சதவீதம் குடிநீருக்காக செலவிட வேண்டிய நிலை இருப்பதால், குறைந்த செலவில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு இளைஞர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன(சிவிஆர்டிஇ) இயக்குநர் பி. சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியில் கல்லூரியின் 29ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் தனலட்சுமியம்மாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்எஸ்கே. சுகுமாறன் முன்னிலை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட டிஆர்டிஓ அதிகாரி பி. சிவக்குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: நாட்டின் பண்புகளை மாற்றி அமைக்கும் சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது. கல்வியின் துணையுடன் வாழ்வின் நோக்கத்தையும், வளர்ச்சியையும் தீர்மானித்து, அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருவரால் துணை நிற்க முடியும். சூரிய சக்தி, பருவமழை, ஆற்று நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் பருவங்கள்தோறும் புதுப்பிக்கப்படும். ஆனால், கனிம வளங்களும், எண்ணெய் வளங்களும் புதுப்பிக்க முடியாதவை.
இவற்றின் எதிர்காலத் தேவையை கருதி, அதற்கான மாற்று வழிகள் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத சூழல் உள்ளது. வளர்ந்த நாடுகளில் குடிநீருக்காக அந்த மக்களின் வருமானத்தில் 0.1சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது.
ஆனால், இந்தியர்கள் ஒரு நாள் ஊதியத்தில் 17 சதவீதத்தை குடிநீருக்காக செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, குறைந்த செலவில் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது குறித்து இளைஞர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அறிவியல் மேதை சர்.சி.வி. ராமன் பிறந்தநாளை ஆண்டுதோறும் அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், அவரது இடத்துக்கு வரவேண்டும் என பெரும்பாலான இளைஞர்கள் முயற்சிப்பதில்லை.
 இந்த சிந்தனை இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி, புதிய சாதனைகளை உருவாக்குமானால் 2020 இல் இந்தியா வளர்ந்த நாடாகும் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் கலாமின் கனவு நனவாகும் என்றார் அவர்.
விழாவில், 467 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் என். மகேந்திரன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com