திண்டுக்கல் அருகே ஆட்டோ மீது கார் மோதல்: தந்தை, மகன் சாவு

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும், அவரது மகனும் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும், அவரது மகனும் உயிரிழந்தனர்.
        திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்காதர் (60), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி சம்சுனியா பேகம் (42). இவர்களது மகன் மீரான் மைதீன்(12), மகள் கத்திஜா பீவி (8).
 இவர்கள், முத்தனங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் (42)  என்பவரது ஆட்டோவில்,  திண்டுக்கல் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுள்ளனர்.  ஆட்டோவானது, திருச்சி-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் தாமரைப்பாடி அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மோதியது. இதில், ஆட்டோ ஓட்டுநர் முருகன் மற்றும் அப்துல்காதர் குடும்பத்தினரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல்காதர் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மீரான் மைதீன் மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்சுனியா மற்றும் கத்திஜாபீவி ஆகிய இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், ஆட்டோ ஓட்டுநர் முருகன் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    விபத்தை ஏற்படுத்திய காரில் சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களிடம், வடமதுரை போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னை  பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த நித்தியன் (24) மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த ரிஷப் (23) என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும், கொடைக்கானல் செல்வதற்காக வந்துள்ளனர்.
 இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், காரை தாங்கள் இருவரும் ஓட்டி வரவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், திருச்சி-திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் உள்ள ரகசியக் கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com