பராமரிப்பின்றி கொடைக்கானல் பேருந்து நிலையம்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தை பராமரித்து,  சேதமடைந்துள்ள இருக்கைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் பேருந்து நிலையத்தை பராமரித்து,  சேதமடைந்துள்ள இருக்கைகள், கழிப்பறைகள் ஆகியவற்றை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம் 15 ஆண்டுகளுக்கு முன் ரூ. 4.50 கோடி செலவில் கட்டப்பட்டு, தனியார் நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைக்கானல் நகராட்சி  சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில்,  பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இலவச கழிப்பறையில் தண்ணீர் வசதியில்லை, பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றுலா வாகனங்களின் ஆக்கிரமிப்பு,  சுகாதாரக்கேடு, இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை என பேருந்து  நிலையம் சீர்கெட்டுப் போயுள்ளது. இதை, சம்பந்தப்பட்ட அரசு துறையோ, காவல் துறையோ கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.   
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பேருந்து கிளை கழக அலுவலர் ஒருவர் கூறியது: கொடைக்கானல் பேருந்து நிலையத்தின் பராமரிப்பு தனியார் துறையிடம் இருந்தபோது சுத்தமாக இருந்தது. எந்த தனியார் சுற்றுலா வாகனங்களும் பேருந்து நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது தனியார் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் மிகவும் சீர்கெட்டுள்ளது என்றார்.
கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறியது: கொடைக்கானல் பேருந்து நிலையத்தை பராமரிப்பதற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 5 லட்சம் செலவாகிறது. இரவு நேரத்தில் நகராட்சிப் பணியாளர்கள் 2 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதியில்லை. இப் பிரச்னை குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையத்துக்குள் உள்ள பயணிகள் இருக்கைகள், இலவச கழிப்பறைகள் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தில் காவலர்கள் அறை உள்ளது.
இதை, காவல் துறையினர் பயன்படுத்தினால், பேருந்து நிலையத்துக்குள் எந்தவிதமான சமூக விரோதச் செயல்கள் மற்றும் பிரச்னைகள் ஏற்படாது.  பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com