வறட்சி: பனை பொருள்கள் உற்பத்தி பாதிப்பு

வேடசந்தூர் பகுதிகளில் பனை பொருள்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேடசந்தூர் பகுதிகளில் பனை பொருள்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் உள்ள தோப்பூர், கரட்டூர், மாமரத்துசாலை, சுக்காம்பட்டி, ரெட்டியப்பட்டி, தாசமநாயக்கன்பட்டி, ஆர்.கோம்பை, சின்ன அழகுநாயக்கனூர், பாகநத்தம் தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போரில், ஒரு பகுதியினர் பனை மரங்கள் சார்ந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். குறிப்பாக, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் மூலம் கருப்பட்டித் தயாரிக்கும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
கார்த்திகை முதல் தை மாதம் வரை ஆண் பனையிலும், பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பெண் பனைகளிலும் பதநீர் வடிக்கும் தொழில் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், இந்த ஆண்டு ஆண் பனைகளில் பாளை உற்பத்தியாக வில்லை. இந்நிலையில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பெண் பனைகளிலிருந்து வரும் பாளையை, பனைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர்.
பங்குனி பிறந்து 10 நாள்கள் நெருங்கும் நிலையில், கடும் வறட்சியின் காரணமாக அந்த பனைகளிலும் பாளை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது பனைத் தொழிலாளர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சின்ன அழகுநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளிகே.குப்புச்சாமி கூறியது: மழையில்லாததால், கடும் வறட்சியைத் தாங்கக் கூடிய பனை மரங்களும் கருகும் நிலையில் உள்ளன. முன்பெல்லாம் 50 மரங்கள் ஏறி பதநீர் இறக்கினால், 20 கிலோ கருப்பட்டி கிடைக்கும். கடந்த 4 ஆண்டுகளாக பதநீர் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால், 50 மரங்கள் ஏறினாலும் 5 கிலோ கருப்பட்டிக்கான பதநீர் மட்டுமே கிடைக்கிறது. பெண் பனைகளில் 10 பாளை வர வேண்டிய இடத்தில், தற்போது 2 அல்லது 3 பாளைகள் மட்டுமே உற்பத்தியாகியுள்ளன.
இதனால், குத்தகைக்கு எடுத்தவர்களும், கருப்பட்டி வியாபாரிகளிடம் முன் பணம் பெற்றவர்களும் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குவது போல், பனைத் தொழிலாளர்களை பாதுகாக்கவும் அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கருப்பட்டி விலை உயர்வு
 கடந்த ஆண்டு ஒரு கிலோ கருப்பட்டியை வியாபாரிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்தனர். தற்போது உற்பத்தி குறைவால் கிலோ ரூ.280-க்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் பனைத் தொழிலாளர்கள், வீட்டு உபயோகத்துக்கு கூட பதநீரை எடுத்துக் கொள்ளாமல், முழு பதநீரையும் கருப்பட்டி தயாரிக்கவே பயன்படுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com