திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டை இடமாற்றக் கோரி உண்ணாவிரதம்: காங்கிரஸ் அறிவிப்பு

திண்டுக்கல் காந்தி காய்கறிச் சந்தையை இடமாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, காங்கிரஸ் விவசாயப் பிரிவின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆர். பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் காந்தி காய்கறிச் சந்தையை இடமாற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, காங்கிரஸ் விவசாயப் பிரிவின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆர். பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
காய்கறி உற்பத்திக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் திண்டுக்கல் காந்தி மைதானத்தில் அமைந்துள்ளது.
   கடந்த 1992 இல் செயல்படத் தொடங்கிய இந்த காய்கறிச் சந்தைக்கு, அப்போதைய நகராட்சி நிர்வாகத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது 365 கடைகளுடன் செயல்பட்டு வரும் இந்த சந்தை, வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வு அளிக்கும் இடமாகவும் உள்ளது.   365 கடைகளில், போதுமான இடவசதி இல்லாததால், 160 கடைகள் சந்தைக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், 4 நாள்களுக்கு முன் நடைபெற்ற காய்கறிச் சந்தைக்கான ஏலத்தில், ரூ. 62 லட்சத்துக்கு ஏலம் போனது.
மகாத்மா காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றதாலேயே, இந்த மைதானம் காந்தி மைதானம் என பெயர் பெற்றது. அதன்பின்னர், காந்தி காய்கறிச் சந்தையாக மாறியபோதிலும், காந்தியின் நினைவாக மீண்டும் மைதானமாக மாற்றவேண்டும் என காந்தியவாதிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   இதனிடையே, பழனி சாலையில் உள்ள லாரி பேட்டைக்கு இந்த காய்கறிச் சந்தையை இடமாற்றுவதற்கான நடவடிக்கையிலும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. ஆனால், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். இச் சூழலில் ரூ. 62 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
   இது குறித்து காங்கிரஸ் விவசாயப் பிரிவு திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஆர். பழனிச்சாமி கூறுகையில், மகாத்மா காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்த மைதானத்தில், காய்கறிச் சந்தையை அமைத்து சுகாதாரமில்லாத இடமாக மாற்றிவிட்டனர். சந்தையை இடமாற்றம் செய்யக் கோரி, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளேன். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com