விளைச்சல் பாதிப்பு:  நத்தத்தில் வெளி மாவட்ட மாம்பழங்கள் விற்பனை

நத்தம் பகுதியில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில், வெளி மாவட்ட மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நத்தம் பகுதியில் மா விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில், வெளி மாவட்ட மாம்பழங்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மா சாகுபடி நடந்தாலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாம்பழத்திற்கு தனி மவுசு உண்டு. இமாம்பஸ்து, காளாப்பாடி, பங்கனபள்ளி (சப்பட்டை), செந்தூரம்(பாலாமணி), கல்லாமை, காசா (நீலம்), சக்கரகுட்டி, குத்தூஸ், சேலம் குண்டு, மல்கோவா, அல்போன்சா, மல்லிகை, நீலிசா உள்ளிட்ட பிரதான மாம்பழ ரகங்கள் அனைத்தும் நத்தம் பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன.
 நத்தம் அடுத்துள்ள பரளி, வத்திப்பட்டி, முளையூர், குட்டூர், செந்துறை, குட்டுப்பட்டி, தவசிமடை, வேம்பார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், பல பகுதிகளிலும் மா மரங்கள் அழிந்துவிட்டன. பிரதான வாழ்வாதாரமாக உள்ள மா மரங்களை, பல விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.  கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மா உற்பத்தி, நிகழாண்டிலும் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக ஏப்ரல் முதல் வாரத்தில் நத்தம் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். தற்போது வறட்சியின் காரணமாக மா மரங்கள் பூக்கும் பருவம் நிகழாண்டில் தாமதமாக தொடங்கியது. அதனால் காய்களின் வரத்தும் தற்போது வரை தொடங்கவில்லை. இதனால் நத்தம் பகுதி வியாபாரிகள், மதுரைக்கு விற்பனைக்கு வரும் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்ட மாங்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
 நத்தம் மாம்பழ சீசன் தொடங்கினால் வெளி மாநில வியாபாரிகளின் வருகை இருக்கும்.  தற்போது  வெளி மாவட்ட மற்றும்  மாநில வியாபாரிகள் நத்தம் பகுதிக்கு வருவதை தவிர்த்துவிட்டனர். சில நாள்களில் நத்தம் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மாங்காய் அறுவடையாகி வந்தாலும், பருவ நிலை மாற்றத்தால் தரமான காய்கள் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் மட்டுமின்றி முதலீடு செய்துள்ள வியாபாரிகளும் எதிர்பார்த்த அளவுக்கு பலனடைய முடியாத சூழல் உள்ளது.
இதுகுறித்து நத்தம் மாம்பழ வியாபாரி கே.எஸ்.அப்துல்ரஹீம் கூறியதாவது:
 குட்டுப்பட்டி, வத்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்துள்ளேன். பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரூ.12 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். ஏற்கெனவே பூக்கும் பருவம் தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையினால் காய்களின் தரம் பாதித்துவிட்டது.
 கருப்பு வடுக்கள் இருப்பதால் காய்களின் ஈர்ப்புத் திறன் குறைந்துவிட்டது. மேலும்,300 கிராம் இருக்க வேண்டிய காய்கள், தற்போது 75 கிராம் மட்டுமே உள்ளன. உற்பத்தி தாமதமானதால், மதுரையிலிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே நத்தம் பகுதியில் மா உற்பத்தி சரிவடைந்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com