100 சதவீதத் தேர்ச்சிப் பட்டியலில் நத்தம் ஒன்றியம் முன்னிலை

பத்தாம் வகுப்பு தேர்வில் நத்தம் ஒன்றியத்தில் உள்ள 11 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் அந்த ஒன்றியம் முன்னிலை பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வில் நத்தம் ஒன்றியத்தில் உள்ள 11 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் அந்த ஒன்றியம் முன்னிலை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 94.44 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 81 சதவீதத்திலிருந்து (2016), 90.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகள் குறிப்பாக நத்தம் மற்றும் சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளிகள் 100 சதவீதப் பட்டியலில் முன்னிலைப் பெற்றுள்ளன.
மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. அதில் சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, உலுப்பக்குடி, கோட்டைப்பட்டி, முளையூர், பிள்ளையார்நத்தம், வேலையுதம்பட்டி, லிங்கவாடி, மணக்காட்டூர், வத்திப்பட்டி, சக்கிலியன்கொடை மற்றும் குடகிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 11 பள்ளிகளுடன் 100 சதவீதப் பட்டியலில் நத்தம் ஒன்றியம் முன்னிலைப் பெற்றுள்ளது. மாணவர் எண்ணிக்கையை பொறுத்தவரை 85 மாணவர்களுடன் வத்திப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி முழு தேர்ச்சிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 கள்ளர் சீரமரபினர் பள்ளிகளில் கொண்டமநாயக்கன்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளி, தெப்பத்துப்பட்டி, சித்தர்கள் நத்தம், மல்லனம்பட்டி, நெல்லூர் உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 5 பள்ளிகளும், 4 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அழகம்பட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியும் 100 சதவீத தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 77 உதவிப் பெறும் பள்ளிகளில் 26 பள்ளிகளும், 86 மெட்ரிக் பள்ளிகளில் 57 பள்ளிகளும், 13 சுயநிதிப் பள்ளிகளில் 8 பள்ளிகளும் 100 சதவீதச் தேர்ச்சிப் பெற்றுள்ளன.
57 மெட்ரிக் பள்ளிகளில் 15 பள்ளிகள் 20-க்கும் குறைவான மாணவர்களுடனும், அதில் 7 பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவர்களுடனும் தேர்வில் பங்கேற்று 100 சதவீதச் தேர்ச்சியை எட்டியுள்ளன. அதே நேரத்தில் 802 மாணவிகள் தேர்வு எழுதிய திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையுடன் 100 சதவீதப் பட்டியலில் இணைந்துள்ளது.
திண்டுக்கல் நகர், புறநகர், பழனி நகர், புறநகர் என 18 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. இதில் நகர்புறங்களை உள்ளடக்கிய திண்டுக்கல் மற்றும் பழனி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளிக் கூட 100 சதவீதப் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், நத்தம் ஒன்றியத்தில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 11 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சிப் பெற்றிருப்பது கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com