திண்டுக்கல் அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வகத்தில் பணியாளர் பற்றாக்குறை: நோயாளிகள் குளிரில் காத்து கிடக்கும் அவலம்

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் நோயாளிகள் நீண்ட நேரம் குளிரில் காத்துக் கிடப்பதை தவிர்க்க, கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, செல்கவுண்டர்

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் நோயாளிகள் நீண்ட நேரம் குளிரில் காத்துக் கிடப்பதை தவிர்க்க, கூடுதல் பணியாளர்களை நியமிப்பதோடு, செல்கவுண்டர் இயந்திரங்களையும் கூடுதலாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில், நாள்தோறும் 3500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 700 உள்நோயாளிகளும் சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ள மாவட்ட சுகாதார ஆய்வகத்தில் நோயாளிகளுக்கு சிறுநீர், ரத்தம் மற்றும் மலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
உள்நோயாளிகளுக்கு 24 மணி நேரமும், வெளி நோயாளிகளுக்கு காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 3 முதல் 5 மணி வரையிலும் இங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கணினிமயமாக்கப்பட்ட நவீன கருவிகளுடன் கூடிய இந்த ஆய்வகத்துக்கு, நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதனைக்காக வந்து சென்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த மருத்துவமனைக்கே பெரும்பாலானோர் வருகின்றனர். இதனால் காய்ச்சல் பாதிப்புக்காக தலா 300 வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் என மொத்தம் 600 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக ரத்தத்தில் தட்டை அணுக்கள் குறைவதை கண்டறிவதற்காக, குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற சூழலில், ஆய்வகத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆய்வகத்தில் 9 பேர் பணிபுரிந்து வந்த நிலையில், 2 பேர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் 7 பேரில், ஒருவர் வார விடுமுறையிலும், 5 பேர் பகல் பணியிலும், ஒருவர் இரவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் 200 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பதால், ரத்த மாதிரி எடுப்பதிலும், பரிசோதனை செய்து அறிக்கை வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கு கடும் குளிரில் அவர்கள் காத்துக் கிடக்கின்றனர். அப்போது அவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் 43 நொடிகளில் பரிசோதனை முடிவு கிடைக்கும் என தெரிவித்ததை சுட்டிக் காட்டி, இந்த ஆய்வகத்தில் காலதாமதம் ஏற்படுவது ஏன் என்று கேட்டு பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில், பிற அரசு மருத்துவமனைகளிலிருந்தோ, தாற்காலிக ஒப்பந்த அடிப்படையிலோ கூடுதல் பணியாளர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கூடுதல் செல்கவுண்டர் இயந்திரங்களை பயன்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பிற இடங்களில் பணிபுரிவோரை தாற்காலிகமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். அதே போல், நிரந்த பணியாளர்களை நியமிக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com