விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்: பழனி அருகே ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஆளும் கட்சியினர் முறைகேடாக பயனாளிகளைத்

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் ஆளும் கட்சியினர் முறைகேடாக பயனாளிகளைத் தேர்வு செய்வதாகப் புகார் கூறிய பொதுமக்கள், ஊராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
       திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு ஊராட்சிகளிலும் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்துக்காக பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.  இதற்காக, வட்டார வளர்ச்சி அலுவலர், கால்நடைத் துறை அதிகாரிகள் என 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
     ஆனால், இந்த குழுவினரை ஆளும் கட்சியினர் செயல்படவிடாமல், தங்கள் உறவினர்களுக்கு ஆடுகளை வழங்க நிர்ப்பந்தப்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது. 
பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூர் ஊராட்சிக்கு 143 பயனாளிகளுக்கான பட்டியல் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு பயனாளிக்கு 3 பெண் ஆடுகள், 1 ஆண் ஆடு வழங்கப்படுகிறது.
     இந்நிலையில், சின்னக்கலையமுத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் ஆடுகள் வழங்க ஏதுவாக பட்டியலை தயார் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் வியாழக்கிழமை சின்னக்கலையமுத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். 
    மேலும், ஒரே வீட்டில் 2 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வசதி படைத்தவர்கள் மற்றும் முன்னரே பயனடைந்தவர்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். 
      இது குறித்து முன்னாள் ஊராட்சிக் கவுன்சிலர் மயில்சாமி என்பவர் கூறியது: விலையில்லா ஆடுகளுக்கான பயனாளிகள் தேர்வில், ஆளும் கட்சியினர் தலையிட்டு முறைகேடுகளை செய்து வருகின்றனர். 
முறையாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், விதவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து, கட்சியில் உள்ள வசதியானவர்களுக்கும், முன்னரே ஆடுகளை பெற்றவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 
    எனவே, தற்போது தயார் செய்து வரும் பட்டியலை ரத்து செய்துவிட்டு, உண்மையாகக் கஷ்டப்படும் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com