பழனியில் புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன: 3 மணிநேரத்தில் முழுக் கொள்ளளவை எட்டிய வரதமாநதி அணை

பழனியில் கஜா புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. பலத்த மழை காரணமாக 3 மணிநேரத்தில் முழு கொள்ளளவை வரதமாநதி அணை எட்டியது.

பழனியில் கஜா புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. பலத்த மழை காரணமாக 3 மணிநேரத்தில் முழு கொள்ளளவை வரதமாநதி அணை எட்டியது.
புயல் காரணமாக பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.  இதனால் பேருந்து நிலையம் ரவுண்டானா, ரணகாளியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சாலைத் தடுப்புகள் பறந்தன.  சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் சிக்னல் கம்பம் விழுந்தது.  
பழனியில் சார் ஆட்சியர் அலுவலகம், பொதுப்பணித்துறை பயணியர் விடுதி, திருநகர், ஐடிஓ., பள்ளி ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்தன. மதனபுரத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த தகரக் கூரை சூறாவளி காற்றில் பறந்தது.  அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
 ஆயக்குடி, சண்முகநதி, ஆலமரத்துக்களம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.  கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டியில் பலநூறு ஏக்கரில் மக்காச் சோளப்பயிர்கள் மழை மற்றும் காற்றால் சேதமடைந்தன.
அணை திறப்பு:  பழனி  வரதமாநதி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன் அணையில் மொத்த கொள்ளளவான 66.47 அடியில் சுமார் 49 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 
இந் நிலையில் கஜா புயல் காரணமாக  வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் விநாடிக்கு எட்டாயிரம் கனஅடி நீர் வரத்து ஏற்பட்டது. 
இதன் காரணமாக  3 மணி நேரத்தில் அணை 17 அடி நிரம்பியதால், அதன் முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிந்தது.  இதனால் வரட்டாறு, சண்முகநதிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  அணையை ஒட்டிய குட்டிக்கரடு பாலத்தை மூழ்கிக் கொண்டு வெள்ள நீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.    
கரையோரங்களில் இருந்த சிறிய கோயில்கள் மற்றும் குடிசை வீடுகளில் மழை  நீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு வந்தனர்.  வரதமாநதி அணையை தவிர பாலாறு -பொருந்தலாறு அணைக்கும் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வரத்து வந்து கொண்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரை பொதுமக்கள் கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்தனர்.
வாகனங்களுக்குத் தடை: பழனி கொடைக்கானல் சாலையில் காற்று, மழை காரணமாக சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதாலும், மரங்கள், பாறைகள் விழும் அபாயம் உள்ளதாலும், தேக்கன்தோட்டம் சோதனைச்சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.  
இதனால் சுற்றுலா பேருந்துகள், லாரிகள் அடிவாரத்திலேயே நிறுத்தப்பட்டன.  இதையடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனைச் சாவடியில் காத்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com