திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி மற்றும் குஜிலியம்பாறை ஆகிய

திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி மற்றும் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. அதேபோல், வத்தலகுண்டு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 66 சிலைகளை மட்டும் கரைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.     வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் முருகானந்தம் தொடக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, செயலர் அண்ணாதுரை, நகரத் தலைவர் மதுரைவீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
   திண்டுக்கல் சாலை, காந்தி நகர், தெற்குத் தெரு, மார்க்கெட் வீதி வழியாக கண்ணாப்பட்டி பகுதியிலுள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் 66 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில், 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
   சாலை மறியல்: இதனிடையே,  விநாயகர் சிலை ஊர்வலம் கடந்து சென்றபோது, வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் அருகிலிருந்த இஸ்லாமியர்களை ஊர்வலத்தில் சென்றவர்கள் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.    அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல், அவதூறாகப் பேசியவர்கள் மீது புகார் அளிக்கும்பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
நிலக்கோட்டை 
    நிலக்கோட்டை பகுதியில் 80 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. நிலக்கோட்டை நான்கு ரோடு வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், அணைப்பட்டி பகுதியில் நிறைவடைந்தது. அங்குள்ள பெரியார் பிரதானக் கால்வாயில் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம்
     இந்து முன்னணி சார்பில், அம்பிளிக்கை, பெரியகோட்டை, சின்னகரட்டுப்பட்டி,கீரனூர், கள்ளிமந்தையம், இடையகோட்டை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 63 சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 
     இந்த சிலைகள், வெள்ளிக்கிழமை வாகனங்கள் மூலம் ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக, திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம், பழனி சாலை, தாராபுரம் சாலை, ஏபிபி நகர் வழியாகச் சென்று விருப்பாச்சி தலையூற்றில் உள்ள நங்காஞ்சி ஆற்றில் கரைக்கப்பட்டன. 
   ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் ஆ. லீனா ரெஜினா, துணை வட்டாட்சியர் சசி ஆகியோர் மேற்பார்வையில், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.
   இதில், இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் ரகுபதி தலைமை வகித்தார். பா ஜக மாநில இளைஞரணிச் செயலர் எஸ். தங்கராஜ் விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பாஜக திண்டுக்கல் மாவட்டத் தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் வீரமணி, நகரத் தலைவர் முனியப்பன் மற்றும் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com