சொத்து வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, ஒன்றிய செயலர் அஜாய்கோஷ் தலைமை வகித்தார். இதில் கட்சியினர் திரளாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், சொத்து வரியை உயர்த்தியுள்ளனர். அதேபோல், புதிதாக குப்பை வரி வசூலிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வரி உயர்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர். 
இப்போராட்டம் காரணமாக, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் பொதுமக்கள் மட்டுமின்றி, அதிகாரிகளும் உள்ளே செல்ல முடியாமலும், வெளியேற முடியாமலும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவதிப்பட்டனர். வரி உயர்வு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பாண்டியன் (கிராம ஊராட்சி) கூறியதாவது:
 திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. அதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. உள்ளாட்சி நிர்வாகம் தலைவரின் செயல்பாட்டில் இருந்தபோது, ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளுக்கு குறைவாக மதிப்பீடு செய்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல வீடுகள் விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் விஸ்தரிப்பு செய்யப்பட்ட வீடுகளை மறுவரையறை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 
மறுவரை செய்யும் போது, ஒவ்வொரு ஊராட்சிக்கும் வீட்டு வரி மூலம் கிடைக்கும் வருவாய் 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், கடைகள் சார்பில் கொட்டப்படும் குப்பைகளுக்கு மட்டுமே வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கான வரி உயர்த்தப்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com