பழனியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: போக்குவரத்துப் பாதிப்பு

பழனியில் மாற்றுத்திறனாளி அமைப்பாளர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி

பழனியில் மாற்றுத்திறனாளி அமைப்பாளர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி, மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
 பழனியை சேர்ந்தவர் நூருல்ஹூதா. இவர், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில், நூருல்ஹூதா பழனியில் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அவரிடம் விளக்கம் கேட்க, சார் ஆட்சியர் அருண்ராஜ் அழைப்பாணை அனுப்பினார்.
 விசாரணையின்போது முறையாக விளக்கமளிக்காததால் நூருல்ஹூதாவை கைது செய்ய சார் ஆட்சியர் உத்திரவிட்டார். அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பழனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நூருல்ஹூதா ஜாமீனில் வெளியே வந்தார். 
அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக சார் ஆட்சியரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை கோரியும் மாநில அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை பழனி சார் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  இதனால் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி., சுபாஷினி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் தலைமையில் போராட்டக் குழுவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 இதனை கண்டித்து, பழனி பேருந்து நிலையம், புறவழிச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  மறியலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியூ, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் வந்தனர். 
முன்னாள் நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கந்தசாமி, சிஐடியூ ஒருங்கிணைப்பாளர் பிச்சமுத்து உள்ளிட்டோருடன் ஏடிஎஸ்பி சுபாஷினி,  டிஎஸ்பி விவேகானந்தன், வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சமாதானம் ஏற்படவில்லை.
 போராட்டக்குழுவினர் சாலையிலேயே சமையல் செய்ய முற்பட்டபோது அடுப்பு, அண்டா போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  போராட்டம்  மாலை வரை நீடித்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு சம்பவ இடத்துக்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா மீதான வழக்குகளை ரத்து செய்ய பரிசீலனை செய்வதாகவும், நீதிமன்ற வழக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com