கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானல் பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை,கிளாவரை, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டனர்.  நிகழாண்டில் கடந்த 3-மாதங்களுக்கு முன் கொடைக்கானலில் பரவலாக பருவ மழை முன் கூட்டியே பெய்தது. இதனால் உருளைக்கிழங்கு பயிர்கள்  நன்கு வளர்ந்து மகசூல் நிலையை எட்டியது.தற்போது அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில் விளைந்துள்ள உருளைக் கிழங்குகளை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.உருளைக்கிழங்கை சேதமில்லாமல் எடுத்து அவற்றை உலர வைத்து 45-கிலோ எடையில் சாக்கு மூட்டையில் சிப்பம் தயார் செய்து தற்போது வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். ஒரு கிலோ ரூ40-முதல் ரூ.50-வரை விற்பனை செய்யப்படுகிறது.சிப்பம் ஒன்று ரூ.1, 100-முதல் ரூ. 1,300-வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: 
கொடைக்கானலில் முன் கூட்டியே பருவ மழை பெய்ததாலும் தற்போது பரவலாக மழை அடிக்கடி பெய்ததாலும் காய்கறிகளின் விளைச்சல் நன்றாக இருந்தது. மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையக் கூடிய உருளைக் கிழங்கிற்கு வெளி சந்தைகளில் வரவேற்பு இருப்பதால் நல்ல விலையும் கிடைத்துள்ளது. ஆனால் உருளைச்  செடிக்கு  பயன்படுத்தும் மூலப் பொருள்கள் உரம்,பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை சற்று அதிகரித்துள்ளதால் விவசாய இடு பொருள்களை தோட்டக்கலைத்துறையின் சார்பில் மானிய விலையில் கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com