திண்டுக்கல்லில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வசதி கேட்டு திண்டுக்கல்லில்  காலிக்குடங்களுடன் பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

குடிநீர் வசதி கேட்டு திண்டுக்கல்லில்  காலிக்குடங்களுடன் பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த காமராஜர் நீர்த்தேக்கம் முழுமையாக வறண்டதால், திண்டுக்கல் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாநகராட்சி மக்கள் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை மட்டுமே முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 14-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 25 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. இந்த வார்டுக்குள்பட்ட ஜோசப் காலனி, பெத்தாணியா காலனி, ரோமன் மிஷன் 1 மற்றும் 2-ஆவது சந்து பகுதிகளில் ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய் பதிக்கும் பணிகள் முடிவடையவில்லை. ஆனால் பழைய குழாய்களை அடைத்துவிட்ட மாநகராட்சி நிர்வாகம், புதிய குழாய்களில் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துவிட்டது. 14-ஆவது வார்டு பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படாத நிலையில், புதிய குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீர், பாதாளச் சாக்கைடையிலும், வீதிகளிலும் வீணாகி வருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் பழைய குழாயில் குடிநீர் விநியோகிக்க முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. 
இதனால் அதிருப்தி அடைந்த ஜோசப் காலனி, பெத்தாணியா காலனி, ரோமன் மிஷன் 1 மற்றும் 2-ஆவது சந்து பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாமன்ற முன்னாள் உறுப்பினர் தனபால் தலைமையில் திண்டுக்கல் திருச்சி சாலையிலுள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, 2 நாள்களில் அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்கி புதிய குழாயில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணம், திருச்சி சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com