மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையைக்கண்டித்து மீனவர்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள

ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையைக்கண்டித்து மீனவர்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆரோக்கிய தாஸ்பிச்சை மற்றும் ஜான்சன் ஆகிய இரு மீனவர்கள் காயமுற்றனர். மீனவர்கள் இருவரும்ராமேசுவரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 கடலோரக் காவல்படையின் இந்த நடவடிக்கையைக்கண்டித்தும்,அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதனால் ராமேசுவரம் முறைமுகத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 ஆயிரம் மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 25 ஆயிரம் பங்கேற்றுள்ளனர். இதனால்ரூ.2கோடி மதிப்பிலான இறால்மீன் வர்த்தகம் பாதிப்படைந்தது.
அமைச்சர் ஆறுதல்:இதற்கிடையே ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 மீனவர்களை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவர் மீனவர்களின்மருத்துவ செலவுக்கு தனது சொந்த பணத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ராமேசுவரம் மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்தபோது இந்திய கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது.
 மேலும் தமிழகம் முதல்வர் மூலமாக பிரதமரிடம் இந்த பிரச்னையைக் கொண்டு சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் மூலம்தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.
 மீனவர்கள் பேச்சுவார்த்தையின் போது இந்திய கடலோரகாவல்படையினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். முதலில் துப்பாக்கி சூடு குறித்து மறுத்து வந்த நிலையில் தற்போது அதனை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். தவறு செய்தவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன்,மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

காயம்பட்டவர்களிடம் விசாரணை
ராமேசுவரம் மருத்துவமனையில்சிகிச்சை பெறும் மீனவர்களிடம் இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள்புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
 ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் ஆங்கூர், ராஜூவ்சங்கர் ஆகியோர் புதன்கிழமை சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர்களிடம் கடலில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது மீனவ சங்கநிர்வாகிகள் என்.ஜே.போஸ், எமரிட் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

வருத்தம் தெரிவித்தது இந்திய கடலோரக் காவல்படை
ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய கடலோரக் காவல்படைஅதிகாரிகள் புதன்கிழமை மீனவ சங்க நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவித்தனர். மேலும் உரிய விசாரணைக்கு பின்சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
  மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை அலுவலகத்தில் புதன்கிழமை மீனவர் சங்கத் தலைவர்களுடன் கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள்பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவ சங்கத்தலைவர்கள் என்.ஜே.போஸ்,சகாயம்,எமரிட் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். அப்போது மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடலோரக் காவல்படை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்ததுடன், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்  என்று மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com