மத மோதல்களை தூண்டும் கும்பல்: கீழக்கரையில் மேலும் ஒரு இளைஞர் கைது

கீழக்கரையில் மத மோதல்களைத் தூண்டிவிடும் கும்பலைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை, காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

கீழக்கரையில் மத மோதல்களைத் தூண்டிவிடும் கும்பலைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை, காவல் துறையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
       ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கிழக்குத் தெருவில் ரிபாஸ் என்ற முகம்மது ரிபாஸ்(37) என்பவரது வீட்டில், மத மோதல்களைத் தூண்டி விடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாக, போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அந்த வீட்டைச் சோதனையிட்டு, அங்கிருந்து வாள், அரிவாள் உள்ளிட்ட 3 ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கு ஆலோசனையில் ஈடுபடவிருந்த முகம்மது ரிபாஸ் (37), தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர்களான அபுபக்கர் சித்திக் (23), முபாரிஸ் அகமது (32) ஆகிய 3 பேரையும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
      இச்சம்பவம் கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அக்கும்பலைச் சேர்ந்த சிலரையும் தேடி வருகின்றனர். 
   இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மகன் ரிஸ்வான் (24) என்பவரை தேவிப்பட்டினம் பேருந்து நிலையத்திலும், கடந்த 13 ஆம் தேதி சென்னை மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகரைச் சேர்ந்த ஹிதாயத்துல்லா மகன் லியாக்கத் அலி (26) என்பவரை கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியிலும் போலீஸார் கைது செய்திருந்தனர்.
     இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை இரவு கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நண்டு மரைக்காயர் தெருவைச் சேர்ந்த அகமது மன்சூர் மகன் சாஜித் அகமது (20) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மத மோதல்களை தூண்டிவிடுதல் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, 10 பேர் கொண்ட இக்கும்பலில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, இக்கும்பல் செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளாமல் கட்செவி அஞ்சலில் குரூப் அமைத்து, அதன்மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், காவல் துறையினர் தெரிவித்தனர். இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com