ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலிட்ட ஆட்சியர்

ராமநாதபுரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். 

ராமநாதபுரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பொங்கல் பண்டிகை கொண்டாடினார். 
    ராமநாதபுரத்தில் சமூக நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் சத்தியா அம்மையார் நினைவு ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
       இவ்விழாவில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய பின்னர் ஆட்சியர் மேலும் கூறியது:
     தமிழர்களின் கலாசாரமானது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையினை அடிப்படையாக கொண்டதாகும். நமது முன்னோர்கள் உழவுத்தொழிலைத் தான் பிரதானமாக செய்து வாழ்ந்து வந்தார்கள்.அந்த வகையில் உழவுக்கு உறுதுணை புரியும் இயற்கையை வணங்கி நன்றி சொல்லும் விதமாகவும், கால்நடைகளை தொழுது நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சுற்றத்தாருடன் அன்பு பாராட்டி மகிழ்ச்சியுடன் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
       இம்மாதம் 16 ஆம் தேதி ராமநாதபுரம் அருகேயுள்ள அரியமான் கடற்கரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப்பயணிகளை,பொதுமக்களை கவர்ந்திடும் வகையில்  பல்வேறு கடல்நீர் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. பண்டிகை தினங்களை மாணவ,மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போல கல்வி கற்பதையும் கொண்டாட்டமாக கருதி ஆர்வத்துடன் கற்றிருக்க வேண்டும். கல்வியில் ராமநாதபுரம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக மாற்றிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 
   விழாவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com