பேருந்து கட்டண உயர்வு: அரசு விரைவு பேருந்து முன்பதிவுக் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி

பேருந்து கட்டண உயர்வு சாதாரண ஏழை மக்களைப் பாதிப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவுக் கட்டணங்கள் வசூலிப்பதில் பல்வேறு குளறுபடிகள்
பேருந்து கட்டண உயர்வு: அரசு விரைவு பேருந்து முன்பதிவுக் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி

பேருந்து கட்டண உயர்வு சாதாரண ஏழை மக்களைப் பாதிப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவுக் கட்டணங்கள் வசூலிப்பதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் சனிக்கிழமை முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு செலவுகள் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துகளில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இக்கட்டண உயர்வானது சாதாரண ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாக பொதுமக்கள், பயணிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து கட்டண உயர்வு: ராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் சாதாரணப் பேருந்துகளுக்கு ரூ. 67, இடைநில்லாப் பேருந்துகளுக்கு ரூ. 75 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, சாதாரணப் பேருந்துகளுக்கு ரூ.100, இடைநில்லாப் பேருந்துகளுக்கு ரூ. 112 வசூலிக்கப்படுகிறது.
ராமநாதபுரத்திலிருந்து செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டண உயர்வு விவரங்கள்(முந்தைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்):
திருச்சி- 170 (115), சேலம்-306 (205) சென்னை- சொகுசுப் பேருந்துகளுக்கு-611 (375), சாதாரணப் பேருந்துகளுக்கு 430 (298), தூத்துக்குடி 108 (73), கோயம்புத்தூர் 273 (182), செங்கோட்டை 195 (135) என கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரத்திலிருந்து கோயம்புத்தூர், திருச்செந்தூர் செல்லும் பயணிகளுக்கு ராமேசுவரத்திலிருந்து செல்வது போல் முன்பதிவுச் சீட்டு கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கட்டணம் வசூலிப்பதில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மேலும், ராமேசுவரத்திலிருந்து ராமநாதபுரம் வரையிலான தொலைவுக்கு பயணம் செய்யாமலேயே அதற்கான கட்டணத்தை பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
கட்டண உயர்வு குறித்து ராமநாதபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மைய பொறுப்பாளர் ஒருவர் கூறியது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ராமநாதபுரத்திலிருந்து திருச்செந்தூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு ராமேசுவரத்திலிருந்து செல்வது போன்றே பயணச்சீட்டு வழங்க முடியும். அவ்வாறுதான் பல ஆண்டுகளாக முன்பதிவுக்கான கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவேதான், ராமேசுவரத்திலிருந்து செல்வதுபோல் பயணச்சீட்டு வழங்குகிறோம். மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தும் ராமநாதபுரத்திலிருந்து செல்வது போல் பேருந்து நிறுத்த மையம் (சென்டர்) கணினியில் இல்லை.
பேருந்து கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் முன்பதிவுக் கட்டணத்துக்கான கணினியில் சென்னைக்கு மட்டும் கட்டண உயர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய கட்டணங்களில் முன்பதிவு செய்து பயணச்சீட்டு வழங்குகிறோம். உயர்த்தப்பட்ட கட்டணத்தை பயணிகள் பேருந்துகளில் ஏறிய பின்னர் வசூலிக்கப்படுகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com