கடும் வறட்சி: தென்னை, வாழை  மரங்கள் பாதிப்பு: கிணற்றைத் தூர்வாரும் பணி மும்முரம்

சிவகங்கை மாவட்டம், பிரமனூர் பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக கிணற்று நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், தென்னை மற்றும் வாழை மரங்களைக்
coconut
coconut

சிவகங்கை மாவட்டம், பிரமனூர் பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக கிணற்று நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், தென்னை மற்றும் வாழை மரங்களைக் காப்பாற்ற விவசாயிகள் கிணற்றைத் தூர்வாரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    பிரமனூர், கணக்கனேந்தல், பறையங்குளம் ஆகிய கிராமங்களிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்களும், 100 ஏக்கரில் வாழையும் பயிரிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே நிலவும் கடும் வறட்சி காரணமாக, பயனுக்கு வரும் முன்னரே 50 சதவீதத்துக்கும் மேலான தென்னை மரங்களும், வாழை மரங்களும் கருகிவிட்டன.
   கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், கடந்த 3 ஆண்டுகளாக வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்படாததாலும், இந்தப் பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதன் காரணமாக, மீதமுள்ள தென்னை மற்றும் வாழை மரங்களும் கருகும் நிலையில் உள்ளன.
   எனவே, கருகும் நிலையில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை காப்பாற்றும் நோக்கில், விவசாயிகள் கிணற்றை தூர்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 ஆனால், அவ்வாறு தூர்வாரப்பட்ட பின்னரும் தென்னை மற்றும் வாழை மரங்களை காப்பாற்ற போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.  
    இது குறித்து பிரமனூரைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் பெரியசாமி, அபுபக்கர் சித்திக் ஆகியோர் கூட்டாகக் கூறியது: பிரமனூர், கணக்கனேந்தல், பறையங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய தண்ணீரின்றி பாதிக்கும் மேல் தென்னை மற்றும் வாழை மரங்கள் கருகிவிட்டன. மீதமுள்ள மரங்களை காப்பாற்றும் நோக்கில், கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், கிணற்றிலும் தண்ணீர் மட்டம் குறைவாகவே உள்ளது.
வழக்கத்தை விட இந்தாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
   இந்நிலையில், பருவமழை தொடங்கும் காலம் வரை இந்த தண்ணீரை வைத்து எஞ்சியுள்ள தென்னை மற்றும் வாழை மரங்களை காப்பாற்ற முடியாது எனத் தோன்றுகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com