மாணவரை சடலமாக சித்திரித்த  ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பள்ளியில் நடந்த கலையருவி விழா போட்டியில், பள்ளி மாணவரை சடலமாக சித்திரித்த ஆசிரியர்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பள்ளியில் நடந்த கலையருவி விழா போட்டியில், பள்ளி மாணவரை சடலமாக சித்திரித்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
தேவகோட்டை கல்வி மாவட்டத்தில், திருப்பத்தூர் ஒன்றிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறனை வெளிப்படுத்த அரசு சார்பில் கலையருவி கலைத் திருவிழா என்ற தலைப்பில் புதன்கிழமை போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பள்ளி மாணவர்களுக்கு பல தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான தமிழக பள்ளி கல்வித் திருவிழா நெறிமுறை வழிகாட்டி என்ற புத்தகம் முறையாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. 
இந்நிலையில், திருப்பத்தூர் ஆர்.சி. பாத்திமா நடுநிலைப் பள்ளியில் நடந்த கலையருவி கலைத் திருவிழா போட்டியில், மது மற்றும் புகையிலை, சிகெரட் உள்ளிட்ட பழக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணர்த்துவதற்காக, தானிப்பட்டி தொடக்கப் பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சவப் பெட்டியில் சடலமாகக் கிடப்பது போன்று சித்திரிக்கப்பட்டது.  இதைப் பார்த்த பெற்றோர்கள் மற்றும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் வேதனை அடைந்தனர். 
திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில், தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. 
எனவே, மாணவரை சடலமாக சித்திரித்த பள்ளி ஆசிரியர் மீதும், தேசியக் கொடியை அவமதித்த ஆசிரியர் மீதும் கல்வித் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இது குறித்து சமூக ஆர்வலர் பன்னீர்செல்வம் கூறுகையில், விவரம் அறியாத மாணவரை சடலமாக சித்திரித்ததுடன், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசித்த ஆசிரியரின் செயல் வண்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குப் பதிலாக பொம்மை உருவத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com