மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து செறிவூட்டப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட வேண்டும்: தேசிய அறிவியல் அகாதெமி தலைவர் வேண்டுகோள்

மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து செறிவு செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்தால் இந்திய வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என

மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து செறிவு செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்தால் இந்திய வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என தேசிய அறிவியல் அகாதெமி தலைவர் அனில் கக்கோட்கர் தெரிவித்தார்.
காரைக்குடி மத்திய மின்வேதியில் ஆய்வகத்தின் (செக்ரி) 70-வது நிறுவன நாள் விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு அனில் கக்கோட்கர் பேசிய தாவது:  1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் அணு வெடிப்புச் சோதனைகள் மூலம் தொழில்நுட்பத்திற்கான தடைகள் இந்தியாவை தற்சார்பு தொழில்நுட்பத்தை நோக்கி உந்தித்தள்ளியது. அதன் மூலம் தொழில் நுட்பத்தில் பல சாதனைகளை இந்தியா சாதித்துள்ளது.
ஒருநாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு வருமானம் மூலப்பொருள்களின் வளம், மனித வளம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கச் சிந்தனைகளின் மூலம் மட்டுமே ஈட்டப்படுகிறது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாதான் உலகின் அதிக மொத்த உள்நாட்டு வருமானம் ஈட்டி யது.  அப்போது விவசாயம் மட்டுமே உலகளவில் வருமானம் ஈட்டும் முக்கிய தொழிலாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட புரட்சிகளால் இந்தியாவின் உள்நாட்டு வருமானம் குறைந்து கொண்டே வந்துவிட்டது. இன்றைக்கு அறிவு சகாப்தத்தில் இந்தியா வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. செறிவுபடுத்தப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்கிறது. இந்நிலையை மாற்றினால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருமானம் அதிகரிக்கும்.
போக்குவரத்து,  மருந்து, ரசாயனம் போன்ற துறைகளில் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டில் உலகின் மிகச்சிறந்த அறிவு நிலையில் இருந்தாலும் அதனை மதிப்புக்கூட்டுவதில்  பின்தங்கியே இருக்கிறோம். புத்தாக்கச் சிந்தனையை இளம் வயதிலேயே நம் பள்ளி மாணவர்களுக்கு அளித்தால் உலகம் போற்றும் பல்துறை நிபுணர்களை இந்தியா வருங்காலத்தில் உருவாக்கும்.  நவீன மற்றும் உலக்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் கிராமப்புறங்களில் ஏற்படுத்துவது அவசியம். சென்னை ஐ.ஐ.டி-யில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வுப்பூங்காவைப் போன்று 50 பூங்காக்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
முன்னதாக செக்ரி இயக்குநர் விஜயமோகனன் கே. பிள்ளை தலைமை வகித்துப் பேசினார்.  விசாகப்பட்டினம் என்எஸ்டிஐஎல் நிறுவன இயக்குநர் ஆர். நந்தகோபன் வாழ்த்திப் பேசினார். செக்ரி ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.  முடிவில் நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரி கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com