மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வசதிகள்: மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வசதிகள் செய்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வசதிகள் செய்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மானாமதுரையில் அக் கட்சியின் ஒன்றிய மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு கட்சி நிர்வாகிகள் கே.பாலசுப்ரமணியன், பிரேமலதா ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மூத்த உறுப்பினர் ரெங்கசாமி மாநாட்டுக்கொடியை ஏற்றி வைத்தார். 
மாவட்டச் செயலாளர் எம்.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் முனியராஜ், நகர்ச் செயலாளர் விஜயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரையா, முத்துராமலிங்கபூபதி, வீரபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 
மாநாட்டில் கட்சியின் மானாமதுரை ஒன்றியக் குழு செயலாளராக கே.பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்களாக முனியராஜ், ஆண்டி, விஜயக்குமார்,ராஜாராமன், திருமூர்த்தி, பிரேமலதா, முத்துராமன், வெள்ளைமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்குத் தேவையான கழிப்பறை, விளையாட்டு மைதானம், கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசும் கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்து இப் பள்ளிக்கு மேற்கண்ட வசதிகளை செய்துதர வேண்டும், மானாமதுரை பகுதி விவசாயத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும், மேலப்பசலை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், மானாமதுரை வாரச்சந்தையில் பொருள்களை விற்பனை செய்ய வரும் வியாபாரிகளிடம் பேரூராட்சி நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்ய வேண்டும், மானாமதுரையில் செயல்படாமல் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை முழுமையாக செயல்படுத்தி இப் பகுதியில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com