காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பு வெளியாகுமா?

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பெருநகராட்சியாக விளங்கிவரும் காரைக்குடியை மாநகராட்சியாக சிவகங்கையில் வரும் 18-ஆம் தேதி

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பெருநகராட்சியாக விளங்கிவரும் காரைக்குடியை மாநகராட்சியாக சிவகங்கையில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் அறிவிப்பாரா? என்பது பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிக்கான அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தருணத்தில் காரைக்குடி பெரு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிட மும் ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலம். நிர்வாக நலன்கருதி மாவட்டங்களை பிரித்து மக்களுக்கு எளிமையான வகையில் அரசு சேவை கிடைக்கச்செய்வது என்று சட்டப்பேரவையில் தீர்மானித்து அறிவித்தார்.
அதன்படி இப்பகுதி அப்போதைய ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தது. இதற்கு ஆட்சியர் அலுவலகம் மதுரையில் செயல்பட்டுஅங்கிருந்து நிர்வாகத்தை கவனித்து வந்ததால் 1984 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து எம்.ஜி.ஆர் அறிவித்தார். 1985 ஆம் ஆண்டு முதல் சிவகங்கையைத் தலைநகராகக் கொண்டு சிவகங்கை மாவட்டம் செயல்படத் தொடங்கியது.
முன்னதாக மாவட்டத்தைப் பிரித்து சிவகங்கையை தலைநகராக்குவது என்று இருந்தநிலையில், இம்மா வட்டத்தின் முக்கியமான ஊரான காரைக்குடியைத் தலைநகராக்க வேண்டும் என்று பலரது விருப்பத்தை முன்னாள் எம்.எல்.ஏ கூத்தகுடி சண்முகம் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவினர் எம்.ஜி.ஆரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்துக் கோரிக்கை வைத்தோம் என்று அக்குழுவில் இடம் பெற்றிருந்தவரும், தற்போது காரைக்குடித் தொழில்வணிகக்கழகத் தலைவருமான சாமி.திராவிடமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: நாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்த எம்.ஜி.ஆர் பின்னர் சிவகங்கையை தலைநகராக்குவது என்று முடிவுசெய்து அதன் தொடக்க விழாவிற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்றது.
இதனையறிந்த காரைக்குடி நகர மக்கள் மிகுந்த கவலையடைந்தனர். இதனை தெரிந்துகொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர் சிவகங்கையில் நடைபெற்ற மாவட்டத் தொடக்க விழாவில் பேசும்போது, காரைக்குடி மக்கள் என் மீது வருத்தமாக இருக்கிறார்கள் என அறிகிறேன். அந்த மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு முதல் அழகப்பா பல்கலைக்கழகம் செயல்படத்தொடங்கியது. மேலும் கல்வி நகரமாக காரைக்குடி புகழ்பெற்றுள்ளது.
இந்த நிலையில் காரைக்குடி நகராட்சியும் பல்வேறு வளர்ச்சியடைந்து பெரு நகராட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. 1928 ஆம் ஆண்டில் காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின் 1988 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013 இல் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு பெரு நகராட்சியாக தமிழக அரசு இதனை உயர்த்தியது.
இந்நகராட்சிக்கு தற்போது ரூ. 24 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கிடைக்கிறது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு காரைக்குடி நகர்மன்றம் மாநகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அறிக்கையும் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் காரைக்குடியைச்சுற்றியுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து காரைக்குடியை மாநகராட்சியாக தமிழக அரசு அறிவித்தால் மேலும் நகரம் வளர்ச்சிபெறும்.
மேலும் இப்பகுதி செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலாத்தலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் காரைக்குடியில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் அரசு விதிகளின் படி  செவிலியர் பயிற்சிக்கல்லூரியை அரசு தொடங்கி நடத்துவதற்கான அறிவிப்பும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com