கடனுக்காக குழந்தைகள், தாயை சிறை வைத்ததால் பெண் தற்கொலை: மானாமதுரையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாங்கிய கடனுக்காக  குழந்தைகளையும் தாயையும் கடத்தி  அடைத்து வைத்ததால்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாங்கிய கடனுக்காக  குழந்தைகளையும் தாயையும் கடத்தி  அடைத்து வைத்ததால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர்.  
   மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி தொந்தீஸ்வரி(21). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  இவர் அருகேயுள்ள  தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீராயி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியிருந்தார்.  கடனை திருப்பி செலுத்தாததால் வீராயி உள்ளிட்ட சில பெண்கள் தொந்தீஸ்வரியின்  இரு குழந்தைகள், தாய் சுந்தரகவள்ளி ஆகியோரை ஆட்டோவில் கடத்தி கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். 
 இதனால்  கலியனேந்தல் கிராமத்தில் தாய் வீட்டில் தங்கியிருந்த தொந்தீஸ்வரி மனமுடைந்து தூக்கிதற்கொலை செய்து கொண்டார். கடந்த 8 ஆம் தேதி நடந்த இச் சம்பவம் தொடர்பாக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து வீராயி உள்ளிட்ட பெண்கள் மீது  பழையனூர்  காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் வீராயி கைகது செய்யப்பட்டார். இந் நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) மாநிலங்களின் துணைத் தலைவர் எல்.முருகன், இயக்குநர் எம்.மதியழகன், உதவி இயக்குநர்கள் ஏ.இனியன், எஸ்.லிஸ்டர் உள்ளிட்டோர் கொம்புக்காரனேந்தல் கிராமத்துக்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்து தொந்தீஸ்வரியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.  அதன்பின் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  தற்கொலை செய்து கொண்ட தொந்தீஸ்வரியின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தவணையாக ரூ.4 லட்சத்து 12, 500 வழங்கப்பட்டுள்ளது. அவரது கணவர் கணேசனுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ. 5 ஆயிரம் அவரது குடும்பத்துக்கு வழங்கப்படும். தொந்தீஸ்வரியின் குழந்தைகளை அரசு விடுதியில் சேர்த்து தரமான கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
  விசாரணையின்போது தாழ்த்தப்பட்டோர் விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு மதுரை மாவட்ட உறுப்பினர் பா.பாண்டியராஜன், கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ரெங்கராஜன், மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி. சங்கர்,  ஆய்வாளர்  முகமது பரக்கத்துல்லா, சார்பு ஆய்வாளர் தவமுனி, வட்டாட்சியர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 முன்னதாக  தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், வீரையா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிதமிழர் பேரவை நிர்வாகிகள் தொந்தீஸ்வரி தற்கொலை சம்பவம் குறித்து தாழ்த்தப்பட்டோர் ஆணைய நிர்வாகிகளிடம் தனித்தனியாக மனுக்கள் கொடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com