உயர்க்கல்வி, கூட்டு ஆராய்ச்சி: அழகப்பா, பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் உயர்க்கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் உயர்க்கல்வி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதுகுறித்து அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா கூறியதாவது: 
  இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளை இணைந்து நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 பல்கலைக்கழகங்களிலும் உள்ளஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் வசதிக்காக 2 பல்கலைக்கழகங்களின் நூலகங்களைப் பயன்படுத்துவதற்கும், ஆராய்ச்சிக்களுக்காக ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கும், கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், அவர்களின் ஆராய்ச்சி மேம்படும் வகையில் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை இணைந்து நடத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும். மேலும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தவும், குறுகிய கால கல்வித்திட்டங்களை இணைந்து மேற்கொள்ளவும் துணைபுரியும்.
இத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டுள்ளன. அதில் மதுரை செல்லமுத்து மனநலம் மற்றும் புனர்வாழ்வு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்திலும் மற்றும் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் மாணவர் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கு மனநலம் பற்றிய பயிற்சியளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மனநலம் பற்றிய ஆலோசனைகள் வழங்குவர். 
மற்றொரு நிறுவனமான காரைக்குடி அருகேயுள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் இல்லாத நிலங்களை இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும், இயற்கை வனப்புடைய நிலமாக மாற்ற விவசாயக் கல்லூரிப் பேராசிரியர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கிறது. 
பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தோட்டங்களை உருவாக்கவும், நெல் சாகுபடி செய்யவும், இயற்கை விவசாயம் செய்வதற்கும் மற்றும் வேளாண்காடுகள் வளர்ப்பதற்கும் இந்த ஒப்பந்தம் துணைபுரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com