பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி சிவகங்கை அருகே விவசாயிகள் போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க


சிவகங்கை மாவட்டத்தில் கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கை அருகே சோழபுரத்தில் விவசாயிகள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து வரும் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் குறிச்சிப்பட்டியில் தொடங்கும் இந்த கால்வாய்கள் வழியாக திறக்கப்படும் தண்ணீர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 130 கண்மாய்களில் நிரப்பப்பட்டு சுமார் 6,748 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து பெரியாறு கால்வாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரியாறு பிரதான கால்வாய்களில் கூடுதல் நீரை உடனடியாக திறக்க வேண்டும்.
அனைத்து கால்வாய்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன் தலைமையில் சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, வட்டாட்சியர் ராஜா ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மதியம் 2 மணி அளவில் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் ஞாயிற்றுக்கிழமை முதல் சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்துக் கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்பப்படும் என உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com